நெறி

நெறி1 neṟidal,    2 செ. கு. வி. (v.i.)

   மயிர் குழற்சியாதல்; to be wavy, curly, as the hair of a person.

     “நெறிந்தகருங் குழல்மடவாய்” (திவ். பெரியாழ். 3.10:1);.

     [நெரி → நெறி → நெறி-தல் = வளைதல், நொறுங்குதல், நிலைகெடுதல், நெருங்குதல்]

 நெறி2 neṟittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   1. புறவித ழொடித்தல்; to strip a flower of its calyx.

     “மலர் வாங்கி நெறித்து” (கலித்.76);.

   2. சினத்தால் நெற்றியைச்சுருக்கிப் புருவத்தை வளைத்தல்; to contract, as the brow in anger.

     “நெறித்த நெற்றியர்” (கம்பரா. கரன்வதை,43);.

புருவத்தை நெறித்து என்னைப் பார்த்தார்.

   3. நிமிர்த்துதல்; to prick up as the ears.

காதை நெறித்தான்.

   4. கையாற் பிடித்து விடுதல் (கலித்.32);

 to press firmly with the hand.

   5. இரண்டு கைவிரல்களையும் கோத்துச் சொடுக்கு ஒசை கேட்க வைத்தல்; to crack the fingers.

     “நீ நாசமாய்ப்போ” என்று கைவிரல்களை நெறித்துச் வசவு (சாபம்); சொன்னான்.

து. நெசிபுநி

     [நெறி → நெறி2]

 நெறி3 neṟittal,    4 செ.கு.வி. (v.i.)

   1. முறுக்காயிருத்தல் (இ.வ.);; to be stiff.

   2. மயிர்சுருளல், மயிர் குழலுதல்; to curl in ringlets, as hair.

     “நெறித்திட்ட மென்கூழை” (திவ். பெரியதி. 10.6:8);.

     “நெறிசுரிபூங்குழல்” (யா.கா.செய்.3);.

   3. நெளித்தல்; to cause to bend.

     [நெறி1 → நெறி3-த்தல்.]

 நெறி4 neṟittal,    4 செ. குன்றாவி. (v.t.)

   நோக்குதல் (நீலகேசி, 53,உரை);; to look.

     [நெறி1 → நெறி4-த்தல்.]

 நெறி5 neṟi, பெ. (n.)

   1. முடக்கம், வளைவு; bend, curve, turning, as of a road.

     “நெறிகொள் வரிக்குடர்” (புறநா. 160);.

   2. சுருள்; curliness of hair.

     “குறுநெறிக் கொண்ட கூந்தல்” (பெரும்பாண். 162);.

   3. கருமணல், அறல்; black sand.

     “நெறிமருப்பெருமை” (சீவக. நாமக. 15);.

   4. வழி, way, road, path.

     “கல்வரையு முண்டா நெறி” (நாலடி, 154);.

     “ஒரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே” (தொல். எழுத்து. 45);.

     “கோடியர் தலைவ கொண்ட தறிந அறியாமையின் நெறிதிரிந் தொராஅ தாற்றெதிர்ப் படுதலு நோற்றதன் பயனே” (பொருந.57,59);.

     “நூனெறி மரபிற் பண்ணி யானது” (சிறுபாண்.230);.

     “பல்லெருத்துமணர் பதிபோகு நெடுநெறி எல்லிடைக் கழியுநர்க் கேமமாக” (பொரும்பா.65,66);.

     “படுத்து வைத்தன்ன பாறை மருங்கின் எடுத்து நிறுத் தன்ன விட்டருஞ் சிறுநெறி” (மலைபடு.15.16);.

     “நெடுநெறிச் சகடம் மணல் மடுத்து உரறும் ஒசை” (நற்.4);.

     “புலிபார்த்துறையும் புல்லதர்ச் சிறுநெறி” (நற்.29);.

     “பல்லா நெடுநெறிக் ககன்று வந்தென” (குறுந்.64);.

     “இறையுற வோங்கிய நெறியயல் மராஅத்த” (குறுந்-92);.

     “கல்லுடை நெடுநெறி போழ்ந்து சுரணறுப்ப” (பதிற்றுப்.19:2);.

     “நெறிகெட விலங்கிய நீயிரிச்சுர மறிதலு மறிதிரோ வென்னுநர்ப் பெறினே” (அகநா.8);.

     “யறு நீ ரம்பியி னெறிமுத லுணங்கு” (அகநா.29);.

     “நாஅல் வேத நெறி திரியினும்” (புறநா. 3);.

     “அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” (புறநா.55);.

     “காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே ஏம நெறிபடரு மாறு” (நாலடி,13);.

     “ஒழிந்தாரைப் போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று சாற்றுங்கொல் சாலச் சிரித்து” (நாலடி,49);.

     “நூனெறி மரபின் அரங்கம் அளக்குங் கோலள விருபத்து நால்விரலாக” (சிலப்.3:99,100);.

     “குயிலுவமாக்கள் நெறிப்பட நிற்ப” (சிலப்.3:130);.

     “தீநெறிப் படரா நெஞ்சினை யாகுமதி” (மணிமே.5:29);.

     “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” (குறள்,6);.

     “நின்றிடைவிடாது நெறிசென்றுற நெருக்கி” (கம்பரா. மந்திரப். 55);.

ம. க. நெறி.

     [நெறி1 → நெறி5]

நெறி: குணம் அல்லது பண்பணிகளின் தொகுதியை நெறி அல்லது மார்க்கம் என்பர். தண்டியாசிரியர் செய்யுள் நெறி இரண்டென்று கூறுவார். அவை வைதருப்பம், கவுடம் என்பன. வைதருப்பம் = விதர்ப்பநாட்டுமொழிநடை (நெறி);. கவுடம் = கவுடநாட்டு மொழிநடை. இந்நெறியை முறைமை (ரீதி); என்று வாமனகாரிகை முதலிய வடநூல்கள் கூறும்.

நெறி என்பது, சொல்லும் பொருளும் நோக்கிய தொரு வரையறை. அது செய்யுள் நடையென்று குறிப்பர். வீரசோழியமும் தண்டியலங்காரமும் வைதருப்பம், கவுடம் என்னும் இரண்டை உரைத்து, வை தருப்பத்தையே சிறந்ததாகக் கருதின. அதற்குரிய குணங்கள் பத்து.

     “மெய்பெறு மரபின் விரித்தசெய் யுட்கு வைதருப் பம்மே கெளடம் என்றாங்கு எய்திய நெறிதாம் இருவகைப் படுமே” (தண்டி. 18); என்பது தண்டி யலங்காரம்.

மாறனலங்காரத்தார் மூன்று நெறி கொண்டார். அவை வைதருப்பம், கவுடம், பாஞ்சாலம் என்பன. வாமனரும் இம் மூன்றைக் கூறினார். வாமனருடைய காலம் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். (some aspects of literary criticism in Sanskrit, p.29);.

மாறனலங்கார ஆசிரியர் 16-ஆம் நூற்றாண்டினர். ஆதலின், வாமனர் நூலைப் பின்பற்றியே மாறனலங்கார நூலாசிரியர் நெறி மூன்று வகுத்தனர் என்று கொள்ளலாம்.

தமிழ் விடு துது நூலின் ஆசிரியர் நெறி நான்கு என்றனர்.

     “நல்ல நெறி நாலே விதையா”, 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந் திருந்த ருத்திரர் என்ற ஆசிரியர் இயற்றிய வடமொழி அணியிலக்கணத்தில் வைதருப்பி, கெளடி, பாஞ்சாலி, இலாடியம் என்னும் நான்கு நெறிகள் கூறப்படுகின்றன. அக்கினி புராணத்திலும் இந்நான்கு நெறிகளும் காணப்படும். போசன் இயற்றிய சரசுவதி கண்டாபரணத்தில் மேற்கூறிய நான்கு நெறி யோடு மாகதி, அவந்திகா என்ற இரண்டும் சேர்த்து ஆறாகக் கூறப்படுகின்றன.

வாமனர் இந்நெறிகளுக்கு உறுப்புகளாக இருப்பவை குண அணிகள் என்றும், அவைகளில்

ஒவ்வொன்றும் சொல்லின் குணம், பொருளின் குணம் என இருவகை ஆகும் என்றும் கூறுவர். நெறிகளைப் பற்றி மாறனங்கார நூலாசிரியர், அவை ஒவ்வொரு நாட்டிலும் வழங்கும் முறைபற்றிப் பெயர் பெற்றன என்பர்.

     “மன்னியபேர் யாப்பிற்கு வைதருப்பம் வான்கவுடம். பன்னியபாஞ் சாலம் எனப்பகுத்து – மி ன்னிடையாய். நன்னூன் முழுதுணர்ந்தோர் நாட்டகத்து நாட்டலுறீஇ முன்னுாலுட் கண்ட நெறி மூன்று” (மாறனலங் 77);.

உரையாசிரியர்கள் நெறியைப் பாகம் என்ற சொல்லாலும் குறிப்பர். மெல்லென்ற விழுமிய இனிய மொழியும் மெல்லென்ற விழுமிய இனிய அறம் முதலிய நாற்பொருளும் பொருந்துவன வைதருப்ப பாகம் (நெறி); என்றும், விழுமிய சொற்கடினமும் பொருட் கடினமும் தோய்ந்து அரிய நடைத்தாய்ப் புலவனாற் கூறப்படுவது கவுட பாகம் (நெறி என்றும், மென்மையும் கடினமுமாகிய வைதருப்ப கவுடங்களோடு கூடாதே இடைநிலைப்பட்டனவாம். இனிய சொல்லாலும் பொருளாலும் தடையின்றி நடைபெற்று ஒழுகுவது பாஞ்சாலம் என்றும் கூறுவர். அவ்வந் நெறியாலே பாடும் கவிகளுக்கு அந்நெறியினாலே பெயர் வழங்கும். ஒட்டக் கூத்தர் கவுடப்புலவர் என்று கூறப்படுதல் காண்க. நெறிகளில் வைதருப்ப நெறியே யாவராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளக்கூடியது. (தமிழ்க்காப்பியங்கள், கி.வா.செ.);.

 நெறி6 neṟi, பெ. (n.)

   1. சமயம் (கம்பரா. கோலங்.12);; religion,

   2. சமயக் கொள்கைக் காகவோ தனி மனித ஒழுக்கத்துக்காகவோ ஏற்படுத்தப்பட்ட முறை (விதி);; precept, rule, principle.

     “நாஅல் வேத நெறிதிரியினும்” (புறநா. 2);.

இறுதிவரை சிவ நெறியைக் கடைப்பிடித்தார்

   3. நல்லொழுக்கம்; path of virtue, righteousness.

நெறிதப்புவார்க்கு அறிவிப்பது வீண் (பழ.);

   4. செய்யுணடை; style of poetic composition.

     “எய்திய நெறி” (தண்டி. 12);.

   5. குலம்; line, lineage.

     “மதிநெறி மாதை வேட்பான்” (திருவாலவா. 4:24);

   6. சூழ்ச்சி (உபாயம்);; method means.

     “நெறி காட்டி நீக்குதியோ” (திவ்.இயற்பெரியதி. 6);.

   7. கோயில் (யாழ்.அக.);; temple.

   8. வீடுபேறு (அக.நி.);,

 salvation.

   9. மனநிலை (வின்.);; state

 of mind, temper.

   10. ஆணை, ஆளுகை; rule, sovereignty.

     “குடபுல வரசர்கனெறி செய்து” (திருவிளை. அன்னக்குழி, 20);.

   11. குதிரை முதலியவற்றின்நடை; pace, as of a horse.

     “நெறியைந்து மோங்க” (திருவாலவா. 28:34);.

   12. வரிசை (வின்.);; order, row, series.

   13. அறம், முறைமை (நீதி); (சூடா.);; justice.

ம. க. நெறி.

 நெறி7 neṟi, பெ. (n.)

   நெறிக்கட்டி (உ.வ.);; inflammation of the gland.

     “தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டினது போல” (பழ.);

     [நெரி → நெறி. இது ர- றகரப் பிழைத்திரிபு]

கை கால்களில் காயங்கள் உண்டானால் தொடையிடுக்கிலும், அக்குளிலும் எழும் கட்டி போன்ற அமைப்பு.

 நெறி8 neṟi, பெ. (n.)

   1. தாழ்ப்பாள் (கட்டட. நாமா);; bolt staple.

   2. மண்டைக்குழி (வின்.);; temples.

   3. புறவித ழொடிக்கை; stripping flower of its calyx.

     “முழுநெறிப்பகைத் தழை.” (அகநா.156);.

     [நெரி → நெறி]