தில்லைத்தானம் என வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. கோயில் பெயராக முதலில் அமைந்து பின்னர் ஊர்ப்பெயராயிற்றோ என்ற எண்ணம் பாடல்களை நோக்க எழுகின்றது. சம்பந்தராலும் அப்பராலும் பாடல் பெற்றது இத்தலம்.
நிலா வெண்மதி யுரிஞ்ச நீண்டமாட நிறைவயல் சூழ் நெய்த்தானம் (திருநா – 215-8)
தேனிடை மலர் பாயு நெய்த்தானனை (148-3)
போன்ற பாடல்கள் செழிப்பு சுட்டுகின்றன. என்ற கூற்று இங்குள்ள சிவன் கோயில் பற்றிய தெளிவைப் பெற
அறையும் புனல் வரு காவிரி யலை சேர் வடகரைமேல்
நிறையும் புனை மடவார் பயில் நெய்த்தானமெனீரே
என்ற சம்பந்தர் பாடல் காவிரியின் வடகரையில் இருக்கும் இதனைக் கூறுகிறது. மேலும்,
காலனை வீழச் செற்ற கழலடி யிரண்டும் வந்தென்
மேலவாயிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்றுகின்ற
கோலநெய்த் தானமென்னும் குளிர் பொழிற் கோயின்மேய
நீலம் வைத்தனைய கண்ட நினைக்குமா நினைக்கின்றேனே (திருஞா – 37-1)
என்ற பாடல் கோல நெய்த்தானம் என்றும் குளிர் பொழிற் கோயில் என்று சுட்டும் நிலையில் இது கோயிற் பெயர் என்பதனைத் தெளிவாகக் காண்கின்றோம். நெய்’ சிறப்புடைய அபிஷேகப் பொருளாக, அங்குச் சுட்டப்பட்டதன் காரணமாக இப்பெயர் அமைந்து, பின்னர் ஊர்ப்பெயராகவும் செல்வாக்குப் பெற்றது என்பதை நாம் உணரவியலுகிறது.