நெடுங்களம்

திருநாட்டாங்குளம், திருநாட்டான்குளம் என இன்று திருச்சி மாவட்டத்தில் அமைகிறது இவ்வூர் ஐயடிகள் காடவர்கோன், தம் ஷேத்திரக் கோவை வெண்பாவில்,
தொட்டுத் தடவித் துடிப்பொன்றும் காணாது
பெட்டப்பிணமென்று பேரிட்டுக் -கட்டி
எடுங்கள் அத்தா என்னா முன் ஏழைமட நெஞ்சே
நெடுங்களத்தார் பாதம் நினை’
என இவ்வூரினைக் குறிப்பிடுகின்றார். சம்பந்தர் பதிகமும் (52) இவ்வூருக்கு உள்ளது. எனினும் இவர்களின் பாடல்கள் இந்த ஊரைப் பற்றிய விளக்கம் எதையும் தரவில்லை. அப்பர் தனிப் பதிகம் அமைத்துப் பாட வில்லை எனினும், தம்முடைய பதினைந்தாவது பதிக்கத்தில், (பொது) நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளன் (7) எனச் சுட்டும் நிலையில், சோலைகள் செழிப்புற்ற நெடுங்களம் என்ற எண்ணம் தெரிகிறது எனவே களம் என்பது செழிப்பு மிக்கப் பகுதியைக் குறிக்க, நெடுங்களம் பரந்த பரப்பினைக் குறித்து அமைந்ததோ எனத் தோன்றுகிறது.