நூல்மரபு மூன்றதிகாரக் கருத்தும்கொண்டமை

எழுத்துக்களின் பெயரும் முறையும் எழுத்ததிகாரத்திற்கும்செய்யுளியற்கும் ஒப்பக் கூறியன. எழுத்ததிகாரத்துக் கூறியமுப்பத்துமூன்றனைப் பதினைந்து ஆக்கி ஆண்டுத் தொகை கோடலின், தொகைவேறாம். அளவு, செய்யுளியற்கும் எழுத்திகாரத்திற்கும் ஒத்த அளவும்ஒவ்வா அளவும் உளவாகக் கூறியது. குறிற்கும் நெடிற்கும் கூறிய மாத்திரைஇரண்டிடத் திற்கும் ஒத்த அளவு; ஆண்டுக் கூறும் செய்யுட்கு அளவுகோடற்கு எழுத்ததிகாரத்துக்குப் பயன் தாராத அளபெடை கூறியது ஒவ்வா அளவு.அஃது ‘அளபிறந் துயிர்த்தலும்’ (எ. 33) என்னும் சூத்திரத்தோடு ஆண்டுமாட்டெறிந்தொழுகு மாற்றான் உணரப்படும். இன்னும் குறிலும் நெடிலும்மூவகை இனமும் ஆய்தமும் வண்ணத்திற்கும் எழுத்ததிகாரத்திற்கும் ஒப்பக்கூறியன. முறையும் எழுத்ததிகாரத்திற்கும் செய்யு ளியற்கும் ஒக்கும்.கூட்டமும் பிரிவும் மயக்கமும் எழுத்ததி காரத்திற்கே உரியனவாகக்கூறியன. ‘அம்மூவாறும்’ (எ. 22) என்னும் சூத்திரம் முதலியவற்றான்எழுத்துக்கள் கூடிச் சொல்லாமாறு கூறுகின்றமையின்,சொல்லதிகாரத்திற்கும் இலக்கணம் ஈண்டுக் கூறினாராயிற்று. இங்ஙனம்மூன்று அதிகாரத்திற்கும் இலக்கணம் கூறலின் இவ்வோத்து நூலினது இலக்கணம்கூறியதாயிற்று. (தொ. எ. 1 நச். உரை)