இசைப்பதும் ஒலிப்பதுமாகிய ஒலியெழுத்துக்களின் மரபு களை உணர்த்தும்பகுதி- என்பது இத்தொடரின் பொருள். இஃது ஆறன் தொகை; அன்மொழித்தொகையான், எழுத் தொலிகளைப் பற்றிய இலக்கணம் கூறும் இயலை உணர்த்திநின்றது. நூல் என்பதன் இயற்பொருள் ஒலியெழுத்து. அது ‘சினையிற் கூறும்முதலறிகிளவி’ என்னும் ஆகுபெயரான், புத்தகமாகிய நூலினை வழக்கின்கண்உணர்த்தலாயிற்று. மரபு என்பது மருவுதல் என்னும் தொழிற்பெயரின்அடியாகப் பிறந்த குறியீட்டுச் சொல்; தொன்றுதொட்டு நியதியாக வருதல்என்னும் பொருட்டு. அஃது ஈண்டுத் தமிழ்நெறி உணர்ந்த சான்றோரான்தொன்றுதொட்டு வழங்கப்பெற்று வரும் இலக்கண நெறியை உணர்த்தி நின்றதுஎன்க. எனவே, இவ்விய லுள் கூறப் பெறும் எழுத்தொலி மரபுகள்தமிழ்மொழிக்கே உரியவை என்பது பெறப்படும். (தொ. எ. பக். 72 ச.பால.)