நூல்மரபின் பெயர்க்காரணம்

நூல்மரபு தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் முதல் இய லாகும். இது 33நூற்பாக்களையுடையது. இதன் பெயர்க் காரணம் பற்றிக் கருத்து வேறுபாடுகள்உள.இவ்வதிகாரத்தான் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தினை ஓராற்றான்தொகுத்து உணர்த்தலின் நூல்மரபு என்னும் பெயர்பெற்றது இவ்வியல் என்பர்இளம்பூரணர்.இந்த இயலில் கூறப்படும் விதிகள் மூன்று அதிகாரத்திற்கும்பொதுவாதலின் நூல்மரபு என்னும் பெயர்த்தாயிற்று இவ் வியல் என்பர்நச்சினார்க்கினியர்.எழுத்ததிகாரத்துள் கூறப்படும் எழுத்திலக்கணத்தினைத்தொகுத்துணர்த்துதலான் அதிகார மரபு எனப்படுவதன்றி நூல்மரபு எனப்படாதுஎனவும், இந்த இயலில் கூறப்படுவன செய்கை இயல்களுக்கும்பொருளதிகாரத்தில் செய்யுளியல் ஒன்றற்குமே கருவியாவதன்றி, மூன்றுஅதிகாரத்துக்கும் பொது ஆகாமையின் அக்கருத்துப் பற்றி நூல்மரபு எனப்பெயரிடவில்லை எனவும் முறையே இளம்பூரணர் உரையை யும் நச். உரையையும்மறுத்துச் சிவஞான முனிவர்,“நூலினது மரபு பற்றிய பெயர்கள் கூறலின் நூல்மரபு என்னும்பெயர்த்து. மலை கடல் யாறு குளம் என்றற் றொடக்கத்து உலகமரபு பற்றியபெயர்கள் போலாது, ஈண்டுக் கூறப்படும் எழுத்து குறில் நெடில் உயிர்உயிர்மெய் என்றற் றொடக்கத்துப் பெயர்கள் நூலின்கண் ஆளுதற்பொருட்டுமுதனூல் ஆசிரிய னால் செய்துகொள்ளப்பட்டமையின், இவை நூல்மரபு பற்றியபெயராயின. ஏனை ஓத்துக்களுள் விதிக்கப்படும் பெயர்களும் நூல்மரபு பற்றிவரும் பெயராதல் உணர்ந்து கோடற்கு இது முன் வைக்கப்பட்டது”என்றார்.(சூ.வி. பக். 18)‘நூல் மரபு ’ என்பதன்கண் உள்ள நூல், நூல் எழுதுதற்கு அடிப்படைக்காரணமாய எழுத்து என்ற பொருளை உணர்த்திற்றுப் போலும். (எ. ஆ. பக்.3)நூற்கு இன்றியமையா மரபு பற்றிய குறிகளை விதிக்கும் இயல் நூல்மரபு.(எ. கு. பக். 3)