திருநீர்மலை என்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் அமையும் வைணவத் தலம் இது. ஆழ்வார்களால் சுட்டப்படும் இத்தலம் மலையில் கோயிலைக் கொண்டது. நீர் சூழ்ந்த மலை என்ற காரணத்தினால், இப்பெயர் அமைந்தது என்ற எண்ணத்தைக் காண்கின்றோம். இத்தலத்திற்குத் திருமங்கையாழ்வார் எழுந்தருளின போது ஏரியின் நீர்ப்பிடிப்பால் அவரால் எம்பெருமானைச் சென்று சேவிக்க முடியவில்லை என்றும் பல நாட்கள் காத்திருந்து நீர் வடிந்த பிறகே சென்று சேவித்தார் என்றும் செவி வழிச்செய்தியினால் அறிகின்றோம். இங்ஙனம் அரண்போல் நீர் சூழ்ந்த இடத்தில் அமைந்து இருப்பதால் தான் நீர்மலை என்ற காரணப் பெயர் பெற்று திரு என்ற அடைமொழியுடன் திருநீர்மலை என்ற இம் மலை வழங்கி வருகின்றது போலும் என்ற எண்ணம் ந.சுப்பு ரெட்டியாரால் தரப்படுகிறது. திருமங்கையாழ்வாரின் பாடல் கள் திருநீர்மலையின் செழிப்பை மிகவும் அழகாகத் தருகின்றன.
சேடார் பொழில் சூழ் திருநீர் மலையான் – (நாலா -1521)
ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை – (3775-74)
கலை வாழ் பிணையோடு அணையும் திருநீர் (,)
மலைவாழ் எந்தை மருவும் ஊர் (நாலா-1365)