நீரிடங்களை ஒட்டியன

“நீரின்றி அமையாது உலகு” என்பதால் ஊர்கள் நீர்வளம் மிக்க பகுதிகளையொட்டியே ஏற்பட்டன. பண்டைய நாகரீகங்கள் எல்லாம் ஆற்றங்கரைகளில் தோன்றியுள்ளன என்பது வரலாற்று உண்மை. உணவிற்கும், உடல் தூய்மைக்கும், வேளாண்மைக்கும், ஆடு, மாடு முதலிய வீட்டு விலங்குகளுக்கும் நீர் தேவைப்படுகிறது. எனவே இயற்கையாக நீர்வளம் உள்ளதா என்று பார்த்து மக்கள் குடியேறியிருக்கின்றனர் அல்லது நீர் வசதியை ஏற்படுத்த குளம் , கிணறு போன்ற நீரிடங்களை வெட்டிக் குடியேறியிருக்கின்றனர். நீரிடங்களைச் சுட்டிய வடிவங்கள் தழுவு பெயராக ஊரையும் காலப்போக்கில் சுட்டத் தொடங்கின. அடைப்பு, அணை, ஊருணி (ஊரணி), ஊற்று (ஊத்து), ஏந்தல், ஏரி, ஓடை, கரை, கால், கிணறு, குண்டம், குளம், கேணி, சமுத்திரம், சிறை, சுனை, டேம், தாங்கல், துறை, நதி, ரேவு, படுகை, மடை, வாவி என்ற நீரிடப் பெயர்களும், நீரிடச் சார்புப் பெயர்களும் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூற்று வடிவங்களாக அமைந்துள்ளன.