நீடூர் என்று இன்றும் சுட்டப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது அப்பர். சுந்தரர் பாடல் பெற்ற தலம். இக்கோயில் தலமரமாக கிழமரம் அமைகிறது. எனவே இதன் காரணமாக மகிழாரண்யம், மகிழ வனம் என்ற பிற பெயர் களும் இதற்கு அமைகின்றன. பழிக்காலத்தும் அழியாது நீடித் திருக்கும் தலமாதலின் இது நீடூர் என்று பெயர் பெற்றது என்பர். சுந்தரர்,
நீரில்வாளை வரால் குதி கொள்ளு நிரைபுனற்கழனிச் செல்வ நீடூர் (56-1)
புன்னைமாதவிப் போதலர் நீடூர் (56-2)
பைம்பொழிற் குயில் கூவிட மாடே ஆடுமாமயில் அன்னமோடாட
வலை புனற் கழனித் திருநீடூர் (56-4)
எனப் பலவாறு இவ்வூர் செழிப்பினை இயம்புகின்றார். இதனை நோக்க, பழமையான ஊர் மக்கள் ஊரின் செழிப்பு காரணமாக நீண்டகாலம் குடியிருப்பாகக் கொண்ட ஊர் என்ற நிலையில் நீடூர் என்ற பெயர் அமைந்திருக்குமோ என்ற எண்ணம் எழுகிறது. நீண்ட அமைப்பி லும் எழுந்திருக்கலாம். சேக்கிழாரும் இவ்வூர்ச் சிறப்பினை,
மாறுகடிந்து மண்காத்த வளவர் பொன்னித் திருநாட்டு
நாறு விரைப்பூஞ் சோலைகளின் நனைவாய்திறந்து பொழி செழுந்தேன்
ஆறு பெருகி வெள்ளிமிகும் அள்ளல் வயலின் மள்ளருழஞ்
சேறு நறுவா சங்க மழுஞ் செல்வ நீடூர் திருநீடூர் (58-1)
என்கின்றமை இவ்வூரின் இயற்கை வளம் மிகுதியையுணர்த்துகிறது.