நிலைமொழி வருமொழி அடையடுத்தும்புணர்தல்

அடையாவன நிலைமொழி வருமொழிகளை உம்மைத் தொகையும் இருபெயரொட்டுப்பண்புத்தொகையும்பட ஆக்க வல்லன ஆம்.எ-டு : பதினாயிரம் + ஒன்று = பதினாயிரத்தொன்று – நிலை மொழி அடை.ஆயிரம் + இருபஃது = ஆயிரத் திருபஃது – வருமொழி அடை. பதினாயிரம் + இருபஃது = பதினாயிரத்திருபஃது – இருமொழி அடை.வேற்றுமைத்தொகையும் உவமத்தொகையும் பிளந்து முடிய, பண்புத்தொகையும்வினைத்தொகையும் பிளந்து முடியாமை யின், ஒரு சொல்லேயாம்.அன்மொழித்தொகையும் தனக்கு வேறொரு முடிபின்மையின் ஒருசொல்லேயாம்.இத்தொகைச்சொற்களெல்லாம் அடை யாய் வருங்காலத்து ஒரு சொல்லாய்வரும்.உண்ட சாத்தன் வந்தான் எனப் பெயரெச்சம் அடுத்த பெயரும், உண்டுவந்தான் சாத்தன் என வினையெச்சம் அடுத்த முற்றும் ஒருசொல்லேயாம்.இங்ஙனம் தொகைநிலையாகவும் தொகா நிலையாகவும் அடையடுத்த சொற்களும்நிலைமொழி வரு மொழிகளாகப் புணரும்.எ-டு : பன்னிரண்டு + கை = பன்னிருகை – நிலைமொழி அடை யடுத்துஉம்மைத்தொகைபட நின்றது.ஓடிற்று + பரிமா = ஓடிற்றுப் பரிமா – வருமொழி அடை அடுத்துஇருபெயரொட்டுப் பண்புத்தொகை பட நின்றது. (தொ. எ. 110 நச். உரை)