நிலத் தோற்றங்களை ஒட்டியன

மலை, காடு, வெட்டவெளி, மேடு, பள்ளம், வழி போன்றவை ஊர்ப்பெயர்களாக அமையக் காரணமாக இருக்கின்றன. நிலமாகிய முதற்பொருளின் வேறுபாடுகளையொட்டி நிலத்தோற்றம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று வேறுபடுத்தி அழைக்கப்பட்டு வந்தன என்பதைச் சங்க நூல்கள் காட்டுகின்றன. இவ்வழக்கத்தையொட்டி ஊர்ப்பெயர்களும் நிலத்தோற்றங்களுக்கேற்ப இன்றளவும் வேறுபடுத்தி அழைக்கப்படுகின்றன. கடவு, கட்டை, கல், களம், காடு, கிரி, குண்டு, குழி, குன்றம், சிலம்பு, தேரி, பரப்பு, பள்ளம், பாலை, பாறை, மலை, மேடு, வெளி, வழி என்பன ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக இவ்வழக்கத்தினையொட்டி அமைந்து ஊர்களை வேறுபடுத்துகின்றன.