நின்ற ஊர்

திருநின்ற ஊர் என அழைக்கப்படும் இவ்வூர், இன்று செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது.
நீண்டவத்தக் கருமுகிலை எம்மான் றன்னை
நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார் சோலை
காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக்
கண்டது நான் கடல் மல்லைத் தலசயனத்தே (நாலா -1089)
என்றும்,
குரு மாமணிக் குன்றினை
நின்றவூர் நித்திலத் தொத்தினை (நாலா -1642)
என்றும் திருமங்கையாழ்வார் இங்குள்ள திருமால் புகழ் பாடுகின்றார். தவிர, சேக்கிழார் தமது பெரிய புராணத்தில், பூசலார் நாயனார் பிறப்பு பற்றி, கூறப்புகும் போது,
உலகினில் ஒழுக்கமென்று முயர் பெருந் தொண்டை நாட்டு
நலமிகு சிறப்பின் மிக்க நான்மறை விளங்கு மூதூர்
குலமுதற் சீலமென்றும் குறைவிலா மறையோர் கொள்கை
நிலவிய செல்வ மல்கி திகழ் திருநின்ற ஊராம் (2)
என்று அவர் பிறந்த ஊரினைக் குறிப்பிடுகின்றார். இந்நிலை யில் வைணவக் கோயிலுடன், பழமைமிக்க செல்வம் பொருந்திய தொரு ஊர் இது என்பதும் விளக்கமாக அமைகிறது. இவ்வூரினை, மன்னியசீர் மறைநாவல் நின்றவூர்ப் பூசல் வரிவளையாண் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் (39-11) எனச் சுட்டுகின்றார். இவற்றை நோக்க இருந்தையூர் என்பத னைச் சங்க இலக்கிய ஊர்ப்பெயர்களில் கண்டது போன்று, திருமாலின் நின்ற கோலம் காரணமாக ஏற்பட்ட பெயர் எனக் கூறலாம்.