நின்றியூர்

திருநின்றியூர் எனச் சுட்டப்படும் இவ்வூர் இன்று தஞ்சாவூர் மாவட்டம் சார்ந்து அமைகிறது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற கோயிலையுடையது. சம்பந்தர் பாடல் இதனை நின்றியூர் என்று மட்டுமே குறிக்க அப்பர் வழக்கிலேயே திருநின்றியூர் எனச் சுட்டப்படக் காண்கின்றோம்.
காலன் வலி காலின் னொடு போக்கிக் கடிகமழும்
நீலம் மலர்ப் பொய்கை நின்றியூரின் னிலையோர்க்கே (திருஞான – 18-1)
நிறையும் பூம்பொழில் சூழ் திருநின்றியூர்
உறையுடீசனை யுள் குமென் னுள்ளமே- (திருநா – 137-4)
எனவே நின்றியூர் திருநின்றியூர் என்றும் பிற பக்தி சார்ந்த ஊர்ப்பெயர்கள் போன்று திரு அடை இணைந்து திருநின்றியூர் அன்றே குறிக்கப்பட்டு இருந்ததோ என நினைக்கத் தோன்றுகிறது. ஊரின் பழமை காட்டும் தன்மையும் இங்கு அமைகிறது. இங்குள்ள இறைவன் நின்ற கோலம் காட்டிய தால் இப்பெயர் கொண்டது இவ்வூர் என்பதனை எண்ணலாம். திருமகள் வழிபட்டு நிலைபேறு எய்திய தலம் என்பர். மேலும் சோழன் ஒருவன் திருவிளக்கிட்டுத் தினந்தோறும் வழிபட்டு வந்தான். அவன் கொண்டு வந்த திரி ஒரு நாள் நின்று விடவே சிவலிங்கத்தினின்றும் ஒரு சோதி தோன்றி, அவன் வழிபாட் டிற்கு இடையூறு உண்டாகாமல் உதவியது. அதனால் திரி நின்றவூர் ஆயிற்று. இப்போது திருநின்றவூர் என வழங்குகிறது என்பது செவிவழிச் செய்தி என்ற புராணக்கதையும் இதற்கு உண்டு. பெரிய புராணம் அனைத்து இடங்களிலும் திருநின்றியூர் எனவே வழங்குகிறது.
திருநின்றி யூரின் நிமலனார் நீள்கழல் ஏத்தி (33- 287)