ஊர் மலைநாட்டுத் திருப்பதியாக, ஷோரனூர் மங்களூர் வழியில் ஷோரனூரில் இருந்து சுமார் 25 கல் தொலைவில் உள்ள நாவாய் பாரதப் புழா என்ற ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் கோயிலையுடையதாக இவ்வூர் அமைகிறது. திருமால் கோயில் கொண்ட தலம் இது. கடப்பதற்கு உறுப்பாக இருப்பது கப்பல்;நாவாய். அங்ஙனமே துன்பக் கடலைக் கடப்பதற்கு இத் தலத்து எம்பெருமானும் நாவாய் போன்று இருப்பதால் அவன் எழுந்தருளியுள்ள தலமும் நாவாய் என்ற பெயரால் வழங்க லாயிற்று என்ற கருத்து இவ்வூர்த் தொடர்பாக அமைகிறது. திரு என்ற அடைமொழியுடன் அத்தலம் திருநாவாய் என்று வழக்கிலிருந்து வருகிறது. ஆழ்வார்கள் பாடல்கள் அனைத்திலும் மலை வளத்தின் பசுமையான காட்சிகள் தோற்றம் தருகின்றன. நாவாய் என்ற பெயரையும், கோயில் ஆற்றின் கரை யில் அமர்ந்து இருப்பதையும் நோக்க, ஆற்றின் கரையில் நாவாய் போன்று காணப்பட்டதன்மையால் இப்பெயர் பெற்றிருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.