இன்று தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திருநாம நல்லூர் என்ற பெயரால் சுட்டப்படுகிறது. சுந்தரர் பிறந்த ஊர். அவரால் பதிகம் பெற்ற சிறப்புமுடையது. சேக்கிழார்.
பெருகிய நலத்தால் மிக்க பெருந்திரு நாடு தன்னில்
அருமறைச் சைவம் ஒங்க அருளினால் அவதரித்த
மருவிய தவத்தால் மிக்க வளம்பதி வாய்மை குன்றா
திருமறையவர்கள் நீடும் திருநாவலூராம் அன்றே (6;2-1-4)
என இவ்வூரினைக் குறிப்பிடுகின்றார். சுந்தரர் பாடல் நாவலூர் பற்றிக் குறிப்பிடுகின்றதே தவிர இதனுள் ஊர் பற்றிய விளக்கம் எதுவும் பெற இயலவில்லை. ஆயின் சேக்கிழார் இதனைக் குறிப் பிடும் நிலையில் இதன் சிறப்புகள் தெரியவருகின்றன. கொங்கலர் சோலை மூதூர் (பெரிய 6 : 10-3-4) பூவலம் தடம் பொய்கைத் திருநாவலூர் (பெரிய 6 : 78-3) வயற்சாலி கரும்பாற் கழனித் திரு நாவலூர் (பெரிய 75-12). மட்டுமன்றி, பின்பு கும்பிடும் விருப்பில் நிறைந்து பெருகு நாவல் நகரார் பெருமானும் என்று நாவல் நகர் எனக் குறிப்பிடு வது இவ்வூர்ப்பெயர் பற்றிய விளக்கம் பெற ஏது அமைக்கின்றது. நாவல் மரம் காரணமாக அமைந்த பெயராக இது அமைய வாய்ப்பு அமைகிறது. கெடில நதி அருகில் பாய்வதன் காரணமாக ஊரின் செழிப்பு, மிக்கு காணப்பட்டது எனவும் காண்கின்றோம் நாவல் மரம் இவ்வூரின் தலமரம் என அறியும்போது தலமரம் காரணமாக இப்பெயர் அமைந்ததா? அல்லது ஊரில் நிறைந்து காணப்பட்ட மரம் தலமரமாக அமைக்கப்பட்டதா என எண்ணத் தோன்றுகிறது. எனினும் பெயர்க்காரணம் உறுதிப்படுகிறது.