நாஞ்சில் என்பது ஒரு மலையின் பெயர். அம்மலையை உள்ளடக்கிய நாடும் அப்பெயர் பெற்றது. மதிலுறுப்பு என்னும் பொருளுடைய நாஞ்சில் என்னும் சொல் மதிலோடு கூடிய கோட்டை அமைந்த மலைக்குப் பெயராய் அமைந்தது போலும். கோட்டாறு என்னும் முக்கிய நகரத்தைக் கொண்டது நாஞ்சி நாடு. இது சேர, சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் மாறி. மாறி இருந்திருக்கிறது. நெடுமாறன் என்னும் பாண்டியன் சேரனோடு நாஞ்சில் நாட்டில் போர் செய்து வென்றான் (பாண்டிக் கோவை) என்ற செய்தி பாண்டியர் ஆட்சியில் நாஞ்சில் இருந்ததையும் நாஞ்சில் நாட்டுக் கோட்டாறு, மும்முடிச் சோழபுரம் என்றும், சோழ கேரளபுரம் என்றும் கல்வெட்டுகளில் குறிக்கப் பெற்றிருப்பதால் சோழர் ஆட்சியில் இந்நாடு இருந்ததையும் அறிவிக்கின்றன. நாஞ்சில் நாடு முன்னர்த் திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாய் இருந்து, 1956 முதல் தமிழ்நாட்டைச் சேர்ந்திருக்கிறது. இன்றைய கன்னியாகுமரி மாவட்டமே அப்பகுதியாகும். தமிழ்நாட்டின் தென் எல்லையாகுரிய குமரி இந்நாட்டில் உள்ளது. “உழாநாஞ்சில்’ என்னும் சங்க இலக்கியத்தொடர் உழுபடையைக் குறிக்காமல் மலையைக் குறித்து நாட்டிற்குப் பெயரா யிற்று: ‘உயர்சமைய’ என்னும் தொடரும் சிகரங்களையுடைய மலையைக் குறிப்பதைக் காணலாம். நாஞ்சில் நாட்டுத் தலைவன் நாஞ்சில் வள்ளுவன் எனப் பெயர் பெற்றான்
“செவ்வரைப் படப்பை நாஞ்சில் பெரருந
சிறுவெள்ளருவிப் பெருங்கல் நாடனை” (புறம் 137:12 13)
“உயர்சிமைய உழாஅ நாஞ்சில் பொருந (௸ 139;7)