நாகப்பட்டணம் என்ற கடற்கரைத் தலம். அன்று முதல் இன்று வரை நாகை என வழங்கப்படுகிறது. நாகர்கோயில் கொண்ட நாகர் கோயில் ஊர்ப்பெயர் போன்று. இதுவும் நாகர் வழிபாடு காரணமாகப் பெற்ற ஊர்ப்பெயராகக் கருதப்படுகிறது. ஆதி சேடன் பூசித்த தலமாதலின் இப்பெயர் பெற்றது. அவன் பூசித்த திருக்கோயில் மேற்கே ஒரு மைல் தூரத்தில் நாகநாதர் கோயில் என வழங்குகிறது என்ற கருத்து காணப்படுகிறது. கடற்கரைத் தலமாகிய இது துறைமுகமாகவும் வணிபத் தலமாகவும் பெருமை பெற்றது. தேவார மூவர் பாடல் பெற்ற சிறப்புடைய கோயில் மட்டுமல்லாது வைணவராலும் புகழப் படும் பெருமை கொண்டது. கோயில் காரோணம் என்ற பெயருடன் காணப்பட்டது என்பதை அனைத்துச் சான்றுகளும் தெரிவிக்கின்றன.
தேரார் விழவோவாச் செல்வன் றிரை சூழ்ந்த
காரார் கடனாகைக் காரோணத்தானே (திருஞான -84-3)
வரையார் வனபோல வளரும் வங்கங்கள்
கரையார் கடனாகைக் காரேணத்தானே(.7)
கலங்கற் கடற்புடை சூழ்ந்த ணாகைக்
காரோணத் தெஞ்ஞான்றும் காணலாமே (திருநா -236-5)
கத்தாரி கமழ் சாந்தும் பணித்தருள வேண்டும்
கடனாகைக் காரோண மேவியிருந்தீரே (சுந் -46-1)
திருமங்கையாழ்வார், இங்குக் கோயில் கொண்டுள்ள சௌந்தர்யராஜனைப் பாடுகின்றார். (1758-67) நாகர் என்ற தமிழ் மக்கள் அப்பகுதியில் ஆட்சி புரிந்து வந்தனர் என்ற கருத்தும் அமைகிறது.