நாகேஸ்வரம் என்று தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது இவ்வூர். பாதாள லோகத்திலிருந்து வந்து சிவபெருமானை நாகராஜன் வழிப்பட இத்தலம் அவன் பெயர் கொண்டு நாகேசுவரம் என வழங்குகிறது என்ற எண்ணம் இப்பெயருக்கு அமைகிறது. எனினும் நாகர் கோயில் இருந்தமையால் இப்பெயர் அமைந்திருக்கலாம் எனத்தோன்றுகிறது. காவிரிக்கரையில் அமைந்த சிறப்புடைய இத்தலம், ஞானசம்பந்தரால் சிறப்புடன் புகழப்பெறுகிறது.
குறையணி குல்லை முல்வை யளைந்து குளிர் மாதவிமேல்
சிறையணி வண்டுகள் சேர் திரு நாகேச்சுரத்து அரனே
என்கின்றார் சம்பந்தர். இறைத் தலங்களைத் தொகுத்துரைக்கும் நிலையில் அப்பர் இதனைக் குறிப்பிடுகின்றார். சம்பகாரணியம் என்ற பெயரையும் கொண்டதாக இவ்வூர் அமைந்தது தெரிகிறது சண்பக மரங்களின் மிகுதியே இப்பெயருக்குக் காரணமாகும்.. சிவன் கோயிலுடன், உப்பிலியப்பன் கோயில் என்று சுட்டப் படும் விண்ணகரும் இங்கு உள்ளது. திருமால் தலம் எனவே இப்பெயர் பெற்றது என்பது தெளிவு. திருமங்கையாழ்வார் பேயாழ்வார் பாடல் இத்தலக் கோயிலுக்கு அமைகிறது. துளசிவனம், மார்க்கண்டேய க்ஷேத்திரம் பிற பெயர்கள்.
பூமரு பொழிலணி விண்ணகர் நாலா -1457
தேனார் பூம்புறவில் திருவிண்ணகர் – 1467