தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த இவ்வூர் இன்றும் நல்லூர் எனவே சுட்டப்படுகிறது. திருநாவுக்கரசர், அப்பர் பாடல் பெற்ற தலம் இது.. ஞானசம்பந்தர் இவ்வூரினை நாறும் மலர்ப் பொய்கை நல்லூர் (86-2) என்றும், நண்ணும் புனல்வேலி நல்லூர் (16-11) என்றும் குறிப்பிடுவதுடன்,
திண்ணமரும் பைம் பொழிலும் வயலும் சூழ்ந்த திருநல்லூர்
மண்ண மரும் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே (193-1)
திருநல்லூர்
மலைமல்கு கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே (193-3)
சிறைநவின்ற தண்புனலும் வயலும் சூழ்ந்த திருநல்லூர்
மறை நவின்ற கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே (193-4)
எனவும் பாடும் நிலை, நல்லூர் ஊர்ப்பெயர் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. சிறந்த ஊர் என்ற நிலையில் நல்லூர் எனப் பெயர்க் காரணம் இவண் பொருத்தமாக அமைகிறது. மேலும் இவர்,
நண்டிரிய நாரையிரை தேர வரை மேலருவி முத்தம்
தண்டிரைகண் மோதவிரி போது கமழுந்திருநலூரே (341-1) கயிலை எனச் சுட்டும் நிலையில் இவ்வூர்ப்பெயர் இடைக் குறையாக நலூர் என வழங்கப்பட்ட தன்மை புலப்படுகிறது. போன்று சிறப்புடைய பதி இது என்பதை நாவுக்கரசர்,
நடவா ரடிக ணடம்பயின் றாடிய கூத்தர் கொலோ
வடபாற் கயிலையும் தென்பானல்லூருந் தம் வாழ்பதியே (98-3)
எனச் சுட்டுகின்றார். சேக்கிழார் இப்பதிபற்றி யியம்பும் போது.
அரசினுக்குத் திங்கள் முடியார் அடியளித்தத் திருநல்லூர் (35-68-4)
எனப் பரவுகின்றார். மேலும்,
சேலுலாம் புனற்பொன்னித் தென்கரையேறிச் சென்று
கோல நீள் மணிமாடத் திருந லூர் குறுகினார் (திருநா -213)
எனக் காணும் போது பொன்னியின் தென்கரையில் இவ்வூர் இருக்கும் நிலை புலனாகிறது. எனவே செழிப்பான ஊர். நல்ல ஊராகத் திகழ்ந்திருத்தல் வேண்டும் என்பது ஐயமற விளங்குகிறது.