நறையூர் என்று சுட்டப்படும் இவ்வூர் இன்று தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. ஞானசம்பந்தர், சுந்தரர் ருவராலும் பாடல் பெற்ற இவ்வூர்க் கோயில் சித்தீச்சரம் ஆகும். இவர்கள் பாடல்கள் இவ்வூரின் இயற்கைச் செழிப்பையும் எடுத்தியம்புகின்றன.
சிறைகொள் வண்டு தேனார் நறையூர்ச்சித்தீச்சரமே (திருஞான 71-1)
கடிகொள் சோலை வயல் சூழ் மடுவிற் கயலாரினம் பாயக்
கொடி கொண்மாடக் குழாமார் நறையூர்ச் சித்தீச்சரமே (திருஞான 71-3)
வாரும் மருவி மணிபொன் கொழித்துச்
சேரும் நறையூர்ச் சித்தீச்சரமே (சுந். 93-1)
கழுநீர் கமழக் கயல் சேறுகளும்
செழுநீர் நறையூர்ச் சித்தீச்சரமே (சுந். 93-5)
எனவே இவற்றை நோக்க, இயற்கை நலம் மிக்க ஊராகையினால், நறை என்றால் தேன், நறு நாற்றம் என்ற பொருளைத் தரும் நிலையில் இவற்றின் அடிப்படையில் இப்பெயர் அமைந் திருக்கலாம் எனத் தோன்றுகிறது. செழுநீர் நறையூர்’ எனச் சேக்கிழாரும் இவ்வூர் பற்றியியம்புகின்றார் (பெரிய ஏயர். 61). காவிரியின் தென் கரைத்தலம் இது எனவும், சித்தர்களால் பூசிக்கப் பெற்றதன் காரணமாகச் சித்தீச்சரம் என்ற பெயர் அமைந்தது என்ற எண்ணமும் அமைகிறது. கல்வெட்டுகளிலும் நறையூர் என்றே இவ்வூர்ப் பெயர் குறிப்பிடப்படுகிறது.. நறையூரில் சிவன் கோயில் மட்டுமல்லாது நாச்சியார் கோயிலும் இருந்தது. இதனைப் பாடிப் புகழ்கின்றார் திருமங்கையாழ்வார் (நாலா -1078, 1329, 1470, 1478, 1577…).