நாற்கவிராச நம்பி இயற்றிய அகப்பொருளிலக்கணம். அகப் பொருள் விளக்கம்என்பது நூற்பெயர். சிறப்புப் பாயிரமாகிய ஒன்று நீங்கலாக இந்நூலில் 252நூற்பாக்கள் அமைந்துள. அகத்திணையியல் களவியல் வரைவியல் கற்பியல்ஒழிபியல் என இதன்கண் ஐந்து இயல்கள் உள. அகத்திணையியலுள் முதல் கருஉரிப்பொருள்கள் பற்றிய செய்திகளும், களவு கற்பெனும் இருவகைக் கைகோள்பற்றிய பொதுச்செய்தி களும், கைக்கிளை பற்றிய குறிப்புக்களும், பிறவும்கூறப்பட் டுள. களவியல், கைக்கிளை வகை நான்கனொடு, களவிற்குரிய பதினேழ்கிளவிகளையும் வகையும் விரியும் கூறி விளக்குகிறது. வரைவியலுள், வரைவுமலிவும் அறத்தொடு நிற்றலும் பற்றிய துறைகள் விளக்கப்பட்டுள.புணர்தலும் ஊடலும் ஊட லுணர்த்தலும் பற்றிய செய்திகள் கற்பியலுள் இடம்பெறு வன. இனி, ஒழிபியல் அகப்பாட்டுறுப்புக்கள் பன்னிரண் டனையும்விளக்குகிறது. அவ்வியலுள், அகப்புறக் கைக்கிளை பற்றியும்அகப்பொருட்பெருந்திணை பற்றியும் அகப்பாட் டுள் வருந் தலைமக்களைப்பற்றியும் பல செய்திகள் சில இயைபு பற்றிக் கூறப்பட்டுள.இதற்கொரு பழைய சிறந்த உரை உண்டு. இதன் துறை களுக்குப்பெரும்பான்மையும் தஞ்சைவாணன் கோவை எடுத்துக் காட்டாகும். இந்நூலின்காலம் 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என்ப.‘நம்பியப்பொருள்’ என்றே நூற்பெயர் நிலவுகிறது.