நன்னூல்

தொல்காப்பியத்திற்குப் பின்னர் இயற்றப்பெற்ற இலக்கண நூல்களுள்நன்னூற்கு இணை வேறு எந்நூலும் இல்லை என்பது பெரியோர் பலர்தம் துணிபு.இதன் சூத்திரம் நூற்பா ஆகிய அகவலால் யாக்கப்பெற்றது. சிறப்புப்பாயிரம்பொதுப் பாயிரம் இவற்றோடு, எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் என் னும்இரண்டதிகாரங்களையுடைய இந்நூலின் நூற்பாக்கள் எண் 462.தொல்காப்பியத்திற்கு இது வழிநூல்; தொல்காப் பியத்தின் முந்து நூலாம்அகத்தியத்திற்குச் சார்பு நூல். இந் நூலாசிரியர் சமண முனிவராகியபவணந்தி என்பார். இவர் மூன்றாங் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178-1216)காலத்துச் சிற்றரசனாகிய சீயகங்கன் வேண்டுகோட்கு இணங்க இந் நூலைஇயற்றினர் ஆதலின், இந்நூல் தோன்றிய காலமும் அக்கால அளவிலேயாம்;உரையாசிரியராம் இளம்பூரணர் காலத்துக்குப் பிற்பட்டது;நச்சினார்க்கினியர் காலத்துக்கு முற்பட்டது.சூத்திரங்களின் திட்ப நுட்பமும் கிடக்கை முறையும் இயற் பாகுபாடும்இந்நூலது பெருமையைப் புலப்படுத்துவன. தொல்காப்பியனார் விரிவாகக் கூறியகுற்றியலுகரப் புணரி யற் செய்தியை இவர் தொகுத்து உயிரீற்றுப்புணரியலுள் கூறினார்; அவர் இரண்டு சூத்திரங்களால் தொகுத்துக் கூறியவடமொழி ஆக்கத்தை இவர் பதவியல் இறுதியில் விரித்துக் கூறினார். பழையனகழித்துப் புதியன புகுத்திப் படைக்கப் பட்ட இந்நூல், தொல்காப்பியர்காலத்தினின்று இவர் காலம் வரை மொழித் துறையில் நேர்ந்துள்ள மாறுதல்களைப் புலப்படுத்த வல்லது.இந்நூற்கு மயிலைநாதர் என்ற சமணப்புலவரது காண்டிகை யுரை பழமையானது;அடுத்து ஆறுமுக நாவலர், இராமா நுசக் கவிராயர் முதலாகப் பலரும்காண்டிகையுரைத்தனர். சங்கர நமச்சிவாயர் இந்நூற்கு விருத்தியுரைவரைந்தார். அதனைச் சற்றே புதுக்கினார் மாதவச் சிவஞான முனிவர்.இடைக்காலத் தமிழிலக்கிய வளர்ச்சியை மனம்கொண்டு பவணந்தி இயற்றியஇந்நூல் காலத்திற்கு ஏற்ப வேண்டப் பட்ட தமிழிலக்கணம். இவ்வாசிரியர்ஏனைய பொருள் யாப்பு அணி அதிகாரங்களும் இயற்றியிருக்கக் கூடும்; அவைகால வெள்ளத்தில் அழிந்தன என்பது ஒருசாரார் கருத்து. ‘அரும்பொருள்ஐந்தையும் தருகென’ என்பது சிறப்புப் பாயிரம்.