நன்னூல் எழுத்ததிகாரத் தற்சிறப்புப்பாயிரம்

‘பூமலி அசோகின்’ என்று தொடங்கும் நூற்பா, வணக்கம் அதிகாரம் என்னும்இரண்டனையும் சொல்லுதலின், தற் சிறப்புப் பாயிரமாம். ‘பூமலி அசோகின்புனைநிழல் அமர்ந்த நான்முகற் றொழுது’ என வணக்கம் சொன்னவாறு; ‘நன்கியம்புவன் எழுத்தே’ என அதிகாரம் சொன்னவாறு. (இவ்வாறேசொல்லதிகாரத்தும் ‘முச்சகம் நிழற்றும் முழுமதி முக்குடை அச்சுதனடிதொழுது’ என வணக்கமும், ‘அறை குவன் சொல்லே’ என அதிகாரமும் சொன்னவாறுகாண்க.) நூலினை நுவல்வான் புகுந்து ஈண்டு வணக்கம் வைக்க வேண் டியதுஎன்னையெனின், ‘வழிபடு தெய்வம் வணக்கம் செய்து, மங்கல மொழி முதலாகவகுப்பவே, எடுத்துக் கொண்ட இலக்கண இலக்கியம், இடுக்கண் இன்றி இனிதுமுடியும்’ என்பவாகலின் ஈண்டு வணக்கம் செய்யப்பட்டது. (நன். 55மயிலை.)