நன்னிலம்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த இவ்வூர் இன்றும் இப் பெயரிலேயே சுட்டப்படுகிறது. சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் பின்னர் சேக்கிழாராலும் சுட்டப்படுகிறது.
பலங்கிளர் பைம்பொழிறண் பனிவெண் மதி யைத் தடவ
நலங்கிளர் நன்னிலத்துப் பெருங்கோவில் நயந்தவனே (98-2)
பண்புடை நான்மறையோர் பயின்றேத்திப்பல்கால் வணங்கும்
நண்புடை நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே (98-6)
மடைமலி வண்கமலம் மலர்மேன் மடவன்னமன்னி
நடைமலி நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே- (98-7)
என நன்னிலத்தின் சிறப்புகள் பலவற்றையும் சுந்தரர் பாடல் கள் இயம்புகின்றன. எனவே சிறப்புடைய அல்லது செழிப் புடைய நிலம் என்ற இயல்பு காரணமாக இவ்வூர்ப் பெயர் அமைந்தது எனக் கருதலாம். இங்குள்ள கோயில் பெருங்கோயில் எனச் சுட்டப்பட்டுள்ளது. இக்கோயில் மாடக் கோயில் என்றும், தேன் கூடுகள் இருப்பதால், மதுவனம் என்ற பெயரும் வழங்கப்படுகிறது எனவும் அறிகின்றோம்..