புஞ்சை எனச் சுட்டப்படும் ஊராக, தஞ்சாவூர் மாவட்டத் தில் அமைகிறது. மூவர் தேவாரமும் உடையது இக்கோயில்.
தேனலரும் கொன்றையினார் திருநன்னிபள்ளியினைச் சாரச் செல்வன்
வானணையும் மலர்ச் சோலை தோன்றுவதெப்பதி என்ன மகிழ்ச்சி எய்தி
பானல் வயல் திருநன்னி பள்ளி எனத் தாதையர் பணிப்பக் கேட்டு
ஞானபோன கர் தொழுது நற்றமிழ்ச் சொல் தொடைமாலை நவிலலுற்றார் (பெரிய 34. 114-1-4)
என்ற சேக்கிழாரின் பாடல் இத்தலத்தின் சிறப்புக்கு ஓர் காட்டாக அமைகிறது. மேலும் செழுந் தரளப்பொன்னிசூழ் திருநனி பள்ளி என்ற கருத்தும் (பெரிய 34-112-1) பொன்னி நதி சூழக் காணப்பட்ட இத்தலத்தின் இயல்பைக் காட்டும். ஞானசம்பந்தர். உமையொரு பாகன் உகந்த நகர், என
குளிர் தரு கொம்மலொடு குயில் பாடல் கேட்ட
பெடை வண்டு தானு முரல்
நளிர் தரு சோலை மாலை நரை குருகுவைகு
நனிபள்ளி போலு நமர்காள்
என நனிபள்ளியைச் சுட்டுகின்றார். நனிபள்ளி முதலில் பாலை நிலமாக இருந்தது என்றும், அவ் வூரினர் வேண்டுசோளின்படி நெய்தலாக்குமாறுப் பிள்ளையாரால் பாடியருளிய தென பதினோராம் திருமுறையில் நம்பியாண்டர் நம்பியின் பாடல் குறிப்பு கொண்டு சுட்டுவர், இன்று புஞ்சை எனப்படும் தன்மை புன்செய் நிலங்களைக் கொண்ட காரணத்தால் இருக்கலாம். எனினும் மக்கள் வழக்கில் இவ்வூர் கிடாரம் கொண்டான் என்ற பெயரிலேயே வழங்குகிறது என்பதைத் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் குறிப்பிடுகின்றார். பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரிவர்மன், எனச் சுட்டப்பட்ட இராசேந்திரச் சோழன் வெற்றிச் சின்னமாக அமைந்ததே கடாரம் கொண்டான் என்ற கிடாரம் கொண்டான் என்ற ஊர்ப் பெயர் என்கின்றார் இவர் ? எனவே முதலில் நனிபள்ளி என்ற தலம் பின்னர் இராசேந்திரன் வெற்றிக்குப் பின்னர் கடாரம் கொண்டான் எனச் சுட்டப்பட்டு இருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. நனிப்பள்ளி, நன்னிபள்ளி என்ற இரண்டு விதமாகவும் இப்பெயர் அன்று சுட்டப்பட்டுள்ளது எனினும் இப்பெயர்க் காரணம் புலனாகவில்லை.