நத்தம்

“நத்தம்” என்பது ஓர் ஊர் இருந்து, அழிந்துபட்ட இடத்தைக் குறிப்பிட வழங்கி வரும் சொல்லாகும். நத்தம், நத்தமேடு, நத்தத்துமேடு என்று அவை சொல்லப்படுகின்றன. முன்பு ஊர் இருந்து அழிந்த இடத்தில், மீண்டும் ஊர் உண்டாகும் பொழுது அவ்வூர்ப்பெயரின் பொதுக்கூறாகவோ, சிறப்புக்கூறாகவோ, “நத்தம்” அமைகின்றது. “நத்தம், புறம்போக்கு” என்பது தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை வழக்காக உள்ளது. குடியிருப்பு இருந்து அழிந்து வெறுமனே கிடக்கும் நிலம் “நத்தம்” என்றும் குடியிருப்பில்லாத, எவருக்கும் உரிமையில்லாத இடம் “புறம்போக்கு” என்றும் இதன்வழி குறிப்பிடப்படுகிறது. நத்துதல் (கெடுதல்) என்னும் வினையடிப்படையில் இச்சொல் தோன்றியிருக்கலாம். 16 ஆம் நூற்றாண்டிலேயே இச்சொல் ஊரைக் குறிக்கும் அளவில் பொருள் மாற்றம் பெற்றிருக்கிறது.
“வடபுலத்தார் நத்தம் வளர”
என்னும் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் அடிகளுள் “நத்தம்” என்ற சொல் இப்பொருளில் வந்துள்ளது.