ஒருபொருளின்பின் ஒருபொருள் செல்லுதலைத் ‘தொடர்ச்சி யாகச்செல்கிறது’ என்று கூறும் மரபு இன்றும் இல்லை. இரண்டற்கு மேற்பட்ட பலபொருள்களே ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து செல்கின்றன என்று கூறுதல்மரபு. இரண்டு தொடரன்று. தொல்காப்பியனார் இரண்டெழுத்து மொழியினைத்தொடர் என்னார்; ‘பல’ என்பதன் இறுதியைத் ‘தொடர் அல் இறுதி’ (எ. 214நச்.) என்பார். வடமொழியில் ஒருமை இருமை பன்மை என்பன வசனத்திற்கேயன்றி, மொழியின் எழுத்துக்களுக்கு அன்று. ‘ஒன்று இரண்டு தொடர்’ என்பதுதமிழ்வழக்கே. இரண்டற்கு மேற்பட்ட எழுத்துக்களாலாகிய மொழிகளையே ‘தொடர்மொழி’ என்றல் தொல். கருத்து. இங்ஙனம் ஓரெழுத்தொரு மொழிஈரெழுத்தொருமொழி – தொடர்மொழி – என்று ஆசிரியர் கொண்டமை,குற்றியலுகரத்தைப் பாகுபடுக்க வேண்டி, ஈரெழுத்தொருமொழி -உயிர்த்தொடர்மொழி – இடைத் தொடர் மொழி – ஆய்தத் தொடர்மொழி – வன்தொடர்மொழி – மென்தொடர் மொழி என்ற முறை கொள்வதற் காகவேயாம்.குற்றியலுகரம் குற்றெழுத்தைக் கொண்ட ஈரெழுத்தொரு மொழியில் தோன்றாதுஎனவும், நெட்டெழுத்தைக் கொண்ட ஈரெழுத்தொரு மொழியில் தோன்றும் எனவும்,நெட் டெழுத்தை முதலாகக் கொண்ட ஈரெழுத்தைச் சார்ந்து ஈற்றில் தோன்றும்எனவும் கூறுவதற்காகவே மொழியை மூவகையாகப் பகுத்தாரே அன்றி, வடமொழியைப்பின்பற்றி அவ்வாறு பகுத்தாரல்லர், வடமொழியில் சொல் அவ்வாறுபகுக்கப்படாமையின். (எ. ஆ. பக். – 48, 49)