சங்க இலக்கிய அகத்துறைப் பாடல்களில், தலைவியின் நலம் பாராட்டும் பொழுது ‘தேனூரன்ன’ என்னும் தொடர் பல இடங்களில் ஆட்சி பெற்றுள்ளது. இதன் மூலம் தேனூர் என்னும் ஊர்ப் பெயர் நமக்குக் கிடைக்கிறது. இனிமை என்றும், மணம் என்றும் பொருள்படும் தேன் என்ற சொல்லின் அடியாக இவ்வூர்ப் பெயர் அமைந்திருக்கிறது. வேனிலிலும் தண்புனல் ஓடும் தேனூர் ஆகையால் சோலைகள் நிறைந்து மணம் பரப்பிக் கொண்டே இருந்தது. அதனால்தான் தேனூர் எனப் பெயர் பெற்றதோ எனத் தோன்றுகிறது. இத் தேனூர் தென்னவன் நல்நாட்டு உள்ளது எனக் கூறப் பெற்றிருப்பதால் பாண்டி நாட்டின் அமைந்த ஊர் எனத் தெரிகிறது. மதுரையையடுத்து வைகையில் வடகரையில் தேனூர் என்று ஓர் ஊர் உள்ளது. பராந்தக வீரநாராயணனின் (கி.பி 859 907) தளவாய்புரச் செப்பேட்டில் இவ்வூர்ப் பெயர் இடம் பெற்றுள்ளது.
“திண் தேர்த் தென்னவன் நல்நாட்டு உள்ளதை
வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும்
தேனூர் அன்ன இவள்……”” (ஐங். 54: 1.3)
“தேர்வண் கோமான் தேனூரன்ன” (ஷே. 55:22)
“ஆம்பலஞ்செறுவில் தேனூரன்ன” (ஷே. 57:2)