தற்போது கோயில் பத்து என வழங்கப்படும் இத்தலம் காரைக்காலை அடுத்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்றது இத்தலம் (139). இவர் பாடல்களின் நிலையில் நின்று நோக்க, இவ்வூர்ப் பெயராகத் தெளிச்சேரி அமைந்திருந்தது என்பதும் செழிப்பான, மக்கள் சிறந்து வாழ்ந்ததொரு ஊர் என்பதும் புலனாகிறது.
பூவலர்ந்தன கொண்டு முப்போதுமும் பொற்கழல்
தேவர் வந்து வணங்கு மிகு தெளிச் சேரியீர் (139-1)
வம்படுத்த மலர்ப்பொழில் சூழ மதிதவழ்
செம்படுத்த செழும் புரிசைத் தெளிச் சேரியீர் (139-3)
தவள வெண்பிறை தோய் தரு தாழ்பொழில் சூழநல்
திவள மாமணி மாடந்திகழ் தெளிச் சேரியீர் (139-6)
திக்குலாம் பொழில் சூழ் தெளிச் சேரி (139-11)
பற்று என்பது நன்செய் நிலமாகும். அது தென்னாட்டில் பத்து எனவும், வடநாட்டில் பட்டு எனவும் திரிந்து வழங்கும். திருக்கோவிலுக்கு நிவந்தமாக விடப்பட்ட நிலங்களையுடைய ஊர் கோவில் பத்து என்று பெயர் பெறும் என ரா.பி. சேதுப் பிள்ளை கூறும் கருத்துடன் (ஊரும் பேரும் பக். 27) இவ்வூர்ப் பெயரான கோவில் பத்து இணைத்து எண்ணத் தக்கது. இதற் குரிய காரைக் கோயிற்பத்து என்ற பெயரையும் குறிப்பிடுகின் றார் சோ. சிவபாத சுந்தரம் இருப்பினும் தெளிச்சேரியில் சேரி குடியிருப்புப் பகுதியைக் குறித்து அமைய தெளி’ க்குரிய காரணம் புலப்படவில்லை.