தற்போது திட்டை என்று வழங்கப்படும் தலம், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற் றது இத்தலம். சம்பந்தர் பாடலடிகள்
மன்னுமா காவிரி வந்தடி வருடநல்
செந்நெலார் வளவயல் தென் குடித்திட்டையே (293-1)
செருந்தி பூமாதவிப் பந்தர் வண் செண்பகம்
திருந்து நீள் வளர் பொழிற் றென் குடித்திட்டையே (293-5)
வண்டிரைக்கும் பொழிற் றண்டலைக் கொண்டலார்
தெண்டிரைத் தண்புனற் றென்குடித் திட்டையே (293-10)
என இவ்வூரின் சிறப்பை எடுத்தியம்புகின்றன. திட்டை என்பதற்கு வெள்ளெருக்கு, மணற்றிட்டு என இரண்டு பொருட்களைத் தமிழ் லெக்ஸிகன் தரினும் திட்டை மணற் திட்டுகளையுடைய ஊர்ப்பகுதியாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. சம்பந்தர் பாடல்களினின்றும் காவிரிக்கரைத்தலம் இது என்பது புரிகிறது. எனவே தெற்குப் பகுதி இவ்வூரின் திசையைச் சுட்டி, குடிமக்கள் வாழும் திட்டுப்பகுதி என்ற பொருளில் இப்பெயர் அமைந்திருக்க வாய்ப்பு அமைகிறது. இதனை ஒத்த பிறபெயராக, தஞ்சாவூர் சார்ந்த கருந்திட்டைக் குடி அமைகிறது. இவ்வூர் திருநாவுக்கரசர் தேவாரத்தில் குறிக்கப் பெறுகிறது.