இன்றும் இப்பெயரிலேயே வழங்கப்படும் தலம், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. நாவுக்கரசர் திருத்தெங்கூராய் என இவ்வூர் பற்றி குறிப் பிட, (239-1) ஞானசம்பந்தர் தெங்கூரில் கோயில் கொண்ட சிவனைக் குறித்து தனிப்பதிகமே அமைக்கின்றார்.
சித்தந் தன்னடி நினைவார் செடிபடு கொடுவினை தீர்க்கும்
கொத்தின் றாழ்சடை முடிமேற் கோளெயிற் றரவொடு பிறையன்
பத்தர் தாம் பணிந்தேந்தும் பரம்பரன் பைம்புனல் பதித்த
வித்தன் றாழ்பொழில் றெங்கூர் வெள்ளியம் குன்றமர்ந் தாரே (229-2)
என இவர் பதிகம் தோறும், தெங்கூர் வெள்ளியங்குன்று எனச் சுட்டும் நிலையைக் காண, தெங்கூர் ஊர்ப்பெயர், வெள்ளியங்குன்று இறை இருந்த இடம் என்பது புலனாகிறது. பெரிய புராணத்தில் சேக்கிழாரும் தெங்கூர் பற்றி இயம்புகின்றார். திருஞானசம்பந்தர்,
பைம்புனல் மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப்
பரமர் திரு நெல்லிக் காப்பணிந்து பாடி
உம்பர் பிரான் கைச்சினமும் பரவி, தெங்கூர் ஓங்கு புகழ்த்
திருக் கொள்ளிக்காடும் போற்றிச் (34-574)
செல்லும் நிலையிலும் இவ்வூர் குறித்த சில எண்ணங்கள் விளக்கம் பெறுகின்றன. திருநெல்லிக்காவுக்குப் பக்கத்தில் உள்ளது என்ற எண்ணம் பெரிய புராணமும் காட்டும் நிலையில் தெங்கூர் இரண்டும் ஒன்று என்பது தெரிகிறது. அடுத்து தெங்கூர் ஓங்கு புகழ் திருக்கொள்ளிக்காடும் போற்றி என இயம்பும் நிலையில் வெள்ளியங்குன்று என சம்பந்தர் சுட்டிய கோயில் பெயர், பின்னர் கொள்ளிக்காடு எனவும் சுட்டப்பட்டிருக்கிறது என்பது விளக்கமாகின்றது. அடுத்து சுந்தரர் தம் ஊர்த் தொகையில்,
நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நடப்பானே’ (47-6)
என தெங்கூரைத் தேங்கூர் எனக் குறிப்பிடுகின்றார். இதனைக் கொண்டு தேங்கூர் என்பதே சரியெனக் கொள்வர். எனினும் முதலில் நாம் காணும் பெயர் தெங்கூர் என்ற நிலையில் மட்டுமல்லாது கல்வெட்டுகளும் தெங்கூர் என்றே குறிப்பிடும் நிலை, தெங்கூர் என்பதே சரியான வடிவம் என்பதற்குத் துணையாகின்றது. ரா.பி. சேதுப்பிள்ளை, தெங்கூரை மரம் அடிப்படையான பெயராகச் சுட்டுகின்றார்.