தூணி என்ற அளவுப்பெயர் நிலைமொழியாய்த் தன்னுடைய செம்பாதிஅளவிற்றாகிய பதக்கு என்ற பெயரோடு உம்மைத் தொகைப்படப் புணருங்கால்,பொதுவிதிப்படி (தொ. எ. 164 நச்.) ஏகாரச் சாரியை பெற்றுத் தூணியேபதக்கு என்று புணரும். இஃது அடையடுத்து இருதூணிப் பதக்கு என்றாற்போலவும் வரும்.தூணிக் கொள், தூணிச் சாமை, தூணித் தோரை, தூணிப் பாளிதம்;இருதூணிக்கொள், தூணித்தூணி முதலியனவும் வருமொழி வன்கணம் மிக்குப்புணரும்.சிறுபான்மை இக்குச்சாரியை பெற்றுத் தூணிக்குத் தூணி எனவும்,இருதூணிக்குத் தூணி எனவும் இன்னோரன்னவாக வருதலும் கொள்க. தூணிப்பதக்கு- உம்மைத் தொகை. (தொ. எ. 239 நச். உரை)