துறையூர்

சுந்தரர் பாடல் பெற்ற இவ்வூர் இன்று திருத்தளூர் என வழங்கப்படுகிறது. திருத்தலூர் எனவும் வழங்குவர். தென் ஆர்க்காடு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. இன்றும் பெண்ணையாற்றின் கரையில் காணப்படும் இதனைச் சுந்தரர்,
மலையார் அருவித் திரண் மாமணியுந்திக்
குலையாரக் கொணர்ந் தெற்றி யோர் பெண்ணைவடபால்
கலையாரல்குற் கன்னியராடும் துறையூர்த்
தலைவா வுனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே (1-13)
எனப் பலவாறு பாடும் தன்மை, பெண்ணையாற்றினால் செழிப்புற்ற நிலையைக் காட்டும். பெண்ணையாற்றின் துறையில் அமைந்த காரணத்தில் துறையூர் எனப்பெயர் பெற்றிருக்கிறது என்பதும் இவண் தெளிவாகின்றது. திருநாவுக்கரசரும் துறையூரைச் சுட்டும் தன்மை, இதன் பழமையைக் காட்டும்.
துறையூரும் துவையூரும் தோமூர் தானும்
துடையூரும் தொழவிடர் கட்டொடரா வன்றே (285-4)
இவ்வூர்க் கோயிலில் சோழமன்னர், நாயக்கர், சம்புவராயர் காலத்திய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இக்கல்வெட்டுகளில் அனைத்தும் திருத்துறையூர் என்ற பெயராலேயே இவ்வூர்ச் சுட்டப்படுவது. இக்கோயில் சிறப்புற்ற நிலை சுந்தரர்க்குப் பின் அவர் பாடல் பெற்றமைக்குப் பின் என்பதைக் காட்டுகிறது. மேலும் இன்றைய திருத்தளூர் என்ற பெயர் வழக்கு 15 – ஆம் நூற்றாண்டிற்குப் பின்னைய வடிவமே என்பதும் தெரிகிறது.
1.மத்தம் மதயானையின் வெண் மருப்புந்தி
முத்தம் காணர்ந் தெற்றி யொர் பெண்ணை வடபால்
பத்தர் பயின்றேத்திப் பரவுந் துறையூர்
அத்தா வுனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே சுந். 13-2
2. சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்கள் ஏழாம் திருமுறை- பக். 18