துறையூர்‌

துறையூர்‌ ஓடைகிழார்‌ என்ற புலவர்‌ ஒருவர்‌ பாடிய சங்க இலக்கியப்‌ பாடல்‌ ஒன்றில்‌ “தண்புனல்‌ வாயில்‌ துறையூர்‌” இடம்‌ பெற்றுள்ளது. ஊரால்‌ பெயர்‌ பெற்றார்‌ போலும்‌ இப்புலவர்‌. நீர்த்துறையின்கண்‌ அமைந்த ஊர்‌ துறையூர்‌ எனப்‌ பெயர்‌ பெற்றிருக்க வேண்டும்‌. “நாள்தோறும்‌: குளிர்ந்த நீர்‌ ஓடும்‌ வாய்த்தலைகளையுடைய துறையூர்” என்று சங்க இலக்கியம்‌ கூறுகிறது. துறையூர்‌ என்ற பெயருடன்‌ தென்‌ ஆர்க்காடு மாவட்டத்தில்‌ விழுப்புரம்‌ வட்டத்தில்‌ ஓர்‌ ஊரும்‌, திருச்சிராப்பள்ளி மாவட்டத்‌தில்‌ லால்குடி. வட்டத்தில்‌ ஓர்‌ ஊரும்‌, முசிரி வட்டத்தில்‌ ஓர்‌ ஊரும்‌ உள்ளன.
“நினக்‌ கொத்தது நீ நாடி
நல்கனைவிடுமதி பரிசில்‌ அல்கலும்‌
தண்புனல்‌ வாயிற்‌ றுறையூர்‌ முன்றுறை
நுண்பல மணலினு மேத்தி
உண்குவம்‌ பெரும நீ நல்கிய வளனே” (புறம்‌, (8623 27)