துருத்தி

இன்று குத்தாலம் என வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டம் சார்ந்து அமைகிறது. சம்பந்தர், அப்பர், சுந்தரர். மாணிக்கவாசகர் போன்ற பலரால் பாடல் பெற்ற சிறப்புடையது. கும்பகோணம் மாயூரம் இருப்புப்பாதையில் உள்ள புகை வண்டி நிலையம் எனக் காண்கின்றோம். மேலும் காவிரிக்குத் தென் கரையில் உள்ள இடம் என அறியும்போது அன்று குறிப்பிட்ட பகுதியைச் சுட்டிய இவ்வூர்ப் பெயர் இன்று பரந்ததொரு பகுதியைச் சுட்டுவதையும் நாம் காண்கின்றோம். மேலும், அன்று காவிரியின் நடுவில் இருந்த தலம் இன்று கரையில் இருக்கிறது என்பதை அறிய நீரின் போக்கு மாற்றமும் உணர இயலுகின்றது.
பொன்னியின் நடுவு தன்னுள் பூம்புனல் பொலிந்து போற்றும்
துன்னிய துருத்தியான் -திருநா – 42-5
திடைத்தடம் பொன்னிசூழ்திருத் துருத்தியினில் – பெரிய – 34-486
காவிரிக்கரையில் இதன் இருப்பிடத்தை. காவிரிக்கரைத் தலைத் துருத்தி என ஞானசம்பந்தர் இயம்புகின்றார் (234-1). இங்குள்ள இறைவன் சிறப்பை, ஷேத்திரக் கோவை வெண்பா, திருத்துருத்தி யான் பாதம் சேர் (5) எனவும், திருவாசகம் துருத்தி தன்னில் அருத்தியோடு இருந்தும் (கீர்த்தி 86) எனவும் பேசுகின்றன. நீரின் போக்கு மாறி, காவிரியின் தென்கரையில் அமர்ந்த தன் காரணமாகத் தான் துருத்தி என்ற இதன் பெயர் செல்வாக்கு இழக்க, குற்றாலம் என்ற பெயர் சிறப்புற்றதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. ஒரு வகை ஆத்தி மரம் தலவிருட்சமாக அமைந்த காரணத்தால் குத்தாலம் எனப் பெயர் பெற்றதாக இப்பெயர்க் காரணம் சுட்டுகின்றனர் ஆல் நிறைய இருந்ததால் என்றும், கோயில் தல விருட்சமாகிய உத்தாலம் என்னும் மரத்தின் காரணமாகவே இவ்வூருக்கு இப்பெயர் வந்தது என்றும் சுட்டப்படுவதும் அமைகிறது.