தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த இவ்வூர் இன்று வழக்கில் திலதர்ப்பணபுரி எனவும், மதிமுத்தம் எனவும் வழங்கப்படுகிறது. அரிசிலாற்றின் தென் கரையில் உள்ள இத்தலம் ஞானசம்பந்தர் பாடல் பெற்ற கோயிலைக் கொண்டது.
பொடிகள் பூசிப்பல தொண்டர் கூடிப்புலர் காலையே
அடிகளாரத் தொழுதத்த நின்றவ் வழகன் னிடம்
கொடிகளோங்கிக் குலவும் விழவார்திலதைப்பதி
வடிகொள் சோலைம் பலர் மணங்கமழும் மதிமுத்தமே (254-1)
என்று இவர் பாடும் நிலையில் திலதைப்பதி ஊர்ப்பெயர் என்பதும், மலர் மணங்கமழும் மதிமுத்தம் கோயிற்பெயர் என்பதும் தெளிவுறுகின்றன. இக்கோயிற் பெயர் பின்னர் செல்வாக்குப் பெற்று, திலதைப்பதியைச் செல்வாக்கிழக்கச் செய்துவிட்டதை ன்று. மதிமுத்தம் எனச் சுட்டும் வழக்கு தருகின்றது. அரிசிலாற்றங்கரையில் அமைந்த இவ்வூரினை. தெண்டிரைப்பூம் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி (254-2) என்ற சம்பந்தர் பாடலடிகள் உணர்த்துகின்றன. மேலும் இவ்வூரின் செழிப்பும் இவர் பாடல்களில் புலனாகின்றது. திலதைப்பதி என்ற ஊர்ப்பெயரின் பொருளை நோக்க, சில எண்ணங்கள் புலனாகின்றன. இயற்கைச் செழிப்புள்ள இடமிது. இந்நிலையில் திலதை என்பது மரவகையாக இருக்குமோ எனக் காணின், திலகம், திலதம் என்ற இரண்டு சொற்களாலும் குறிக் கப்பட்ட மஞ்சாடி மரத்தைப்பற்றிய செய்தி தெரியவருகின்றது.
தெரிமுத்தம் சேர்ந்த திலதம் என கலித்தொகையும் (92)
மரவமும் நாகமும் திலகழும் மருதமும் எனச் சிலம்பும் (13-152)
இதனைச் சுட்டுகின்றன. இந்நிலையில் மஞ்சாடி மரங்கள் நிறைந்த இடம் என்ற நிலையில் திலதப்பதி என்ற இடம் திலதைப்பதி ஆகியிருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. ஆயின் இங்குள்ள கோயில் சிறப்பு பெற்று, பக்தியின் செல்வாக்கு மிக்க காலத்தில், திலதைப்பதி என்று பாடல் பெற்ற இத்தலம் திலதர்ப் பணபுரி என பிற மொழியாளர்களால் பெயர் மாற்றம் செய்யப் பட்டு, அதற்கேற்ற புராணக் கதையையும் பெற்றுவிட்டது ! கருத வாய்ப்பு அமைகிறது. சேக்கிழார் காலத்திலும் திலதைப்பதி என்றே கருதப்பட்ட நிலை (34-549) இதன் பழம் பெயரை யுணர்த்தும், இக்கதையின் உண்மையின்மையையும் காட்டும்.