திரிபு எனப்படாத புணர்ச்சிகள்

திரிபு எனப்படாத புணர்ச்சி இயல்புபுணர்ச்சியாம். இதன்கண்,இயல்பாகப் புணர்தலொடு, தனிக்குறிலை அடுத்த ஒற்று ஈற்றின்முன் வருமொழிஉயிர் வரின், நிலைமொழியீற்று ஒற்று இரட்டுதலும், நிலைமொழியீற்றுஉயிர்க்கும் வருமொழிமுதல் உயிர்க்கும் இடையே உடம்படுமெய் கோடலும்,நிலை மொழியீற்று மெய்மீது வருமொழி முதல் உயிரேறி முடித லும் ஆகியமூன்றும் அடங்கும்.எ-டு : அவன் + கொடியன் = அவன் கொடியன் – இயல் பாகப்புணர்தல்.பல் + அழகிது = பல்லழகிது – ஒற்று இரட்டல்.விள + அரிது = விளவரிது – உடம்படுமெய் தோன்றல்.அவள் + அழகியள் = அவளழகியள் – மெய்மேல் உயிரேறி முடிதல்.“வருமொழி உயிர்க்கணமாயின் ஒற்று இரட்டியும், உடம்படு மெய்பெற்றும், உயிரேறியும் முடியும் கருவித்திரிபுகள் திரிபு எனப்படா;இவ்வியல்பின்கண்ண.” (தொ. எ. 144 நச். உரை)