மடக்கணியில் சீரின் முதலெழுத்து நீங்கலான ஏனைய எழுத்துக்கள் ஒத்துமடங்கி வருவதனையும் திரிபணி என்ப. அது திரிபு மடக்காம். ‘திரிபுஅந்தாதி’ என்ற சிறு பிரபந்தங்கள் பிற்காலத்தே பலவாகத் தோன்றின.எ-டு : ‘திருவேங் கடத்து நிலைபெற்று நின்றன; சிற்றனையால்தருவேங் கடத்துத் தரைமேல் நடந்தன; தாழ்பிறப்பின்உருவேங் கடத்துக்(கு) உளத்தே இருந்தன; உற்றழைக்கவருவேங் கடத்தும்பி அஞ்சலென்(று) ஓடின மால்கழலே.’(திருவேங்கடத்.)முதலடி – திருவேங்கடத்து; இரண்டாமடி – தரு வேம் கடத்து; மூன்றாமடி- உருவேங்கள் தத்துக்கு; நாலாமடி – ‘வரு வேம் கட(ம்) தும்பி.திருமாலின் பாதங்கள் திருவேங்கடமலைமீது நிலைபெற்று நின்றன;இராமாவதாரத்தில், தாய் கைகேயியால், மரங்கள் வெப்பத்தில் கரியும்காட்டில் தரைமீது நடந்தன. தாழ்ந்த பிறப்பினால் இம்மானுடஉருவங்களையுடைய எம் துன்பங் களுக்காக அவற்றைப் போக்கவேண்டி எம்உள்ளத்தில் இருந்தன; பெருகும் வெப்பமான மதத்தையுடைய கசேந்திர னாம்யானை அபயக் குரல் எழுப்பிப் பொருந்தி அழைக்கவே “அஞ்சற்க!” என்று கூறிஓடி (அதனைக் காத்த)ன.