தலையாலங்காடு என்ற பெயர் கொண்ட ஊர் இன்றும் இப்பெயரிலேயே – சுட்டப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் சார்ந்தது இது. திருவாலங்காடு என்று சென்னைக்கருகில் உள்ள, காரைக்கால் அம்மையார், தேவார மூவர் போன்ற பலராலும் பாடப்பட்ட தலத்தினின்றும் வேறுபட்ட தலம் இது. இவ்வூர் சிவன் கோயில் சிறப்பு பெற்றது. இதனைக் கபிலதேவ நாயனார், அப்பர் பாடிய பாடல்கள் வழி யுணரலாம்..
தலையாலங் காட்டிற் பலிதிரிவர் என்றும்
தலையாலங்காடர் தாம் என்றும் (93)
என்ற என்ற பாடலடி, சிவபெருமான் திருவந்தாதியில் இடம் பெறுகிறது. திருநாவுக்கரசர் இவ்வூர் இறைவனைப் பற்றிப் பாடும் பதிகத்தில் (293) இவ்வூர் பற்றி எதுவும் விளங்கவில்லை. ஞானசம்பந்தரும் பாடொலிநீர்த் தலையாலங்காடு (373) வணங்கிச் சென்ற நிலை யைச் சேக்கிழார் பாடுதலில் அறிகிறோம். எனவே காரைக்கால் அம்மையார் திருவாலங்காட்டைப் பற்றிப் பாடிய போதிலும் தலையாலங்காடு என்ற இப்பெயரில் உள்ள தலை, சொல் பழமையைக் குறிக்கிறது. இந்நிலையில் பண்டைத் தமிழ் மன்னரான தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ் செழியன் போர் செய்து வென்ற தலையாலங் கானமாக இருக்க லாமா ? என்பது எண்ணற்குரியது. உ.வே.சா தன் புறநானூற்று அரும்பத் அகராதியில், ஆலங்கானம் தலையாலங்கானம் என்னும் பெயரையுடைய தோரூர். இப்பொழுது கலையாலங்கா டென்று வழங்கப்படுகிறது. இதில் நெடுஞ்செழியன் இருபெரு வேந்தரையும் ஐப்பெரு வேளிரையும் பொருது வென்றனன் எனக்குறிப்பிடும் நிலை இவ்வெண்ணத்தை உறுதிப்படுத்துகிறது.