தலைச்சங்காடு

இன்றும் இப்பெயரிலேயே வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்தது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது இத்தலம்.
கேடஞ்சூழ் கொள்கையீர் வேண்டி நீண்ட வெண்டிங்கள்
இடஞ்சூழ் கங்கையு முச்சி வைத்தீர் தலைச்சங்கை
கூடஞ்சூழ் மண்டபமும் குலாய வாசற் கொடித் தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே (391-4)
என்ற சம்பந்தர் தேவாரப்பாடல், இத்தலம் பற்றிய பல எண்ணங்களைத் தருகின்றது. தலைச்சங்கையில் உள்ள கோயில் இறைவன் இங்குப் பாடப்படுகின்ற நிலையில் தலைச் சங்கை ஊர்ப்பெயர் என்பது விளக்கமாகின்றது. மேலும் கோயில் பெரிய கோயிலாகத் திகழ்ந்தது என்பது மண்டபம், கொடி போன்ற எண்ணங்கள் உணர்த்தும் எண்ணம். மட்டுமல்லாது தலைச் சங்காடு என்ற பெயரைத் தலைச்சங்கை என்று, மருவு நிலையில் குறிப்பிடும் தன்மையும் இவண் தெரியவருகின்றது. கல்வெட் டில் இப்பெயர் தலைச்சங்காடு குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே செங்காடு என. செங்குன்றம் போன்று இப்பெயர் அமைந்திருக்கலாம். எனினும் எண்ணங்கள் இங்குச் சிந்திக்கத் தக்கன. சிலப்பதிகாரம் அடைக்கலக் காதையில் மாடலன் பற்றி பேசுமிடத்தில் இளங்கோவடிகள்,
தாழ்நீர் வேலித் தலைச் செங்கானத்து
நான் மறை முற்றிய நலம்புரிக் கொள்கை
மாமறை முதல்வன் மாடலன் என் போன்
எனக் காட்டுகின்றார். அடியார்க்கு நல்லார் தாழ்ந்த நீரை வேலியாக உடைய, தலைச் செங்காடென்னும் ஊரிடத்து எனக் கூறிச் செல்கின்றார். இதற்குக் குறிப்புரை எழுதும் நிலையில் உ..வே.சா, தலைச் செங்காடென்பது காவிரிபூம்பட்டினத்திற்குத் தென் மேற்கே நான்கு நாழிகை வழித் தூரத்தில்உள்ள தேவாரம் பெற்ற சிவஸ்தலம் என்கின்றார். இந்நிலையில் இவ்வூரின் பழமையுடன் செங்குன்றம் போன்று இவ்வூர் பெயர் பெற்றமையும் தெளிவு பெறுகிறது. கல்வெட்டிலும் தலைச் செங்காடு என்ற வழக்கு அமைகிறது. பின்னர் மக்கள் வழக்கில் இவ்வூர் தலைச்சங்காடு என்று வழங்கப்பட்டு இன்று வரை அந்நிலையே நீடிக்கிறது இப்பெயரின் மரூஉவாகச் சங்கை என்பதனைத் தேவாரப் பாடல் உரைக்க, தலைசை என்ற மரூஉவும் இதற்கு உண்டு என்ற எண்ணத்தையும் காண்கின்றோம்