ஐகாரம் தன்னைக் கருதித் தன்பெயர் கூறுமளவில் குறுகாது. சுட்டளவுஎன்பது வினைத்தொகை. ‘அளவு’ என்றார், எழுத்தின் சாரியை தொடரினும்குறுகும் என்பது கருதி. இனி ‘அளபு’ எனப் பாடங்கொண்டு அளபு என்பதனை அளபெடையாக்கித் தன்னைச் சொல்லுதற்கண்ணும் அளபெடுத் தற்கண்ணும் ஐகாரம்குறுகாது என்பர். தன் இயல்பாய இரண்டு மாத்திரையினின்றும் குறுகுதல்இல்லனவற்றை ஒழிப்பார், விகாரத்தான் மூன்று மாத்திரையும் நான்குமாத்திரையுமாய் மிக்கொலிக்கும் அளபெடையை ஒழிக்க வேண்டாமையின் அதுபொருந்தாது. (நன். 95 சங்கர.)