இறையனார் அகப்பொருளுக்குப் பின்னர்த் தோன்றிய அகப்பொருள் நூல்களில்ஒன்று. இந்நூலின் பொருளியல் என்ற பகுதியே கிடைத்துள்ளது. அதுவும்முழுமையாகக் கிட்டவில்லை. அகப்பொருளின் பெரும்பான்மையான பகுதிகிட்டியுள்ளது. அகப்பொருளின் முதல் கரு உரிப் பொருள் களைக் கூறிக்கைக்கிளையை விடுத்து ஆசிரியர் களவினைத் தொடங்கியுள்ளார். அறத்தொடுநிலையும் உடன்போக்கும் இந்நூலுள் கற்பியலுள் அடக்கப்பட்டுள. தலைவனுடையநற்றாய் கூற்று ஒன்றும் இதன்கண் காணப்படுவது புதிய தொரு செய்தியாம்.நூலாசிரியரே உரையும் வரைந்துள்ளார் போலும். இந்நூல் உதாரணப் பாடல்கள்பல களவியற் காரிகையில் மேற்கோளாகக் கொள்ளப்பட்டுள்ளன. இவர், பொருளியலைஅகம், புறம், அகப்புறம் என மூன்றாகப் பிரித்து விளக்கியுள்ளார்.இப்பொழுது கிட்டியுள்ள நூற்பகுதி அகத்தைப் பற்றியதே. இவர் ஓதல் தூதுமுதலிய கற்புக்காலப் பிரிவுகளைச் ‘சேயிடைப்பிரிவு’ எனவும், பரத்தையிற்பிரிவை ‘ஆயிடைப் பிரிவு’ எனவும் குறிப்பிடுகிறார். இந்நூலுள் 25நூற்பாக்களும், உரையில் 173 எடுத்துக்காட்டுப் பாடல்களும் உள்ளன.