தமிழில் அணியிலக்கணத்தை அழகுற எடுத்தியம்பும் இலக்கணம். வடமொழியில்தண்டி என்ற பெருங்கவிஞர் காவியாதரிசம் என்ற அணியிலக்கணம் செய்தார்.அதனை வீரசோழியம் தமிழில் மொழிபெயர்த்துப் பாடுகிறது. காவியாதரிசத்தோடுஒருபுடை ஒத்தும் ஒவ்வாதும் தமிழில் தண்டியலங்காரம் பாடப்பெற்றது.வடமொழித் தண்டியின் இலக்கணச் செய்தியைப் பெரும்பாலும் தழுவ இயற்றப்பட்டமையால், இவ்வழிநூலும் முதல்நூல் ஆசிரியர் பெய ராலே தமிழில்தண்டியலங்காரம் எனப்பட்டது; அன்றி, இத்தமிழ்நூல் ஆசிரியர்தம் பெயர்தண்டி என்றும் இருத்தல் கூடும். இத்தண்டியாசிரியர் கம்பர் மகனாம்அம்பிகாபதியின் புதல்வர் என்ற வரலாறும் உண்டு.இவ்வணி நூலகத்தே பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் என்றமூன்று இயல்களும், அவற்றுள் முறையே 25, 64, 35 நூற்பாக்களும் உள. இவைநீங்கலாகத் தற்சிறப்புப்பாயிரமும் நாமகள் வாழ்த்துப் பாடலும் எனச்செய்யுள் இரண்டாம்.நூலாசிரியரே எடுத்துக்காட்டுப் பாடல்களையும் வரைந்தார். இவற்றுள்வெண்பாப் பாடலே பெரும்பான்மை.இரண்டாங் குலோத்துங்கன் அவைக்களத்தே இந்நூல் அரங்கேறியது என்ப.இதன் காலம் 12ஆம் நூற்றாண்டு எனலாம். மிக்க வழக்குப் பயிற்சியுடையஇவ்வணியிலக்கணம் உவமை முதல் பாவிகம் ஈறாக முப்பத்தைந்து அணிகளைமொழிகிறது. சொல்லணியுள் சித்திரகவிகள் பன்னிரண்டு சொல்லப்பெறுவன;மேலும் எட்டு உரையுள் கொள்ளப் பட்டன. பொதுவணியியல் பத்துக் குணங்களைப்பாரிக் கிறது. 17ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கணவிளக்கம் தனதுஅணியியலுள் தண்டியலங்காரத்தையே தழுவி யுரைத்துள்ளமை இவ்வணி நூலின்பெருமையைப் பறை சாற்றுவது.