திருச்சோற்றுத் துறை என்று வழங்கும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டம் சார்ந்து அமைகிறது. ஆற்றின் கரையில் கோயில் இருக்கிறது. இக்கோயிலைப் பாடியோர் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவருமாவர். காவிரிக் கரையில் உள்ள ஊர் என்பதைப் பாடல் நிலையிலும் நாம் அறிய இயலுகிறது.
உனறயும் செல்வ முடையார் காவிரி
அறையும் சோற்றுத் துறை சென்றடைவோமே திருஞான – 28-5
துனை புனற் பொன்னித் திரைவலம் கொள்
சோற்றுத் துறை தொழச் சென்றடைவார் பெரிய 34-353
எனவே காவிரியின் கரையில் உள்ள ஓர் தலம் என்பது தெளிவாக அமைகிறது. அடுத்து சோற்றுத் துறை என்பதை ஆராயின், தாவரத் தொடர்பானப் பெயர் என்பது துறை என்ற பொதுக் கூறு நிலையிலும் உணரக் கூடிய ஒன்று. சோறு நிரம்பிய அல்லது நிறைந்த துறை என்ற பொருளில் இவ்வெண்ணம் அமைகிறது. கத்தாழை என்றதொரு செடியின் இலையில் இருக்கும் உட்பகுதியைச் சோறு என்று சுட்டும் தன்மை இன்று வரை எனவே இந்தச் சோறு நிரம்பிய அதாவது தாழை நெருங்கிய துறையாக இது அமைந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. தாழை என்ற செடி கடற்கரையில் மிகவும் செழித்து வளர்ந்து வந்த நிலையைச் சங்க இலக்கியங்கள் இயம்புகின்றன. இந்நிலையில் நீர்த் துறையுடன் தொடர்புடைய இப்பெயரும் இக்காரணம் பற்றி எழுந்ததாகவே கருதலாம். பின்னர் இறைச் சிறப்பு திரு என்ற அடையைப் பெய்ய, இவ்வூர் திருச்சோற்றுத் துறை என ஆயிற்று என உணர முடிகிறது.