இப்பொழுது தியாகவல்லி என்ற பெயருடன் அமையும் தலம் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. முதற் குலோத்துங்கன் மனைவி மூவருள் பட்டத்து மனைவியாகிய தியாகவல்லியால் திருப்பணி செய்ய பெற்றமையின் இப்பெயர் பெற்றது என்ற எண்ணம் து சார்பாக அமைகிறது. இங்குள்ள இறைவனின் பெயர் சோபுர நாதர் என அறியும் போது சோபுரநாதரினின்றும் ஊர்ப்பெயர் அமைந்ததா ? அல்லது சோபுரத்திலுள்ள இறைவன் சோபுர நாதர் எனப்பட்டாரா? என்ற எண்ணம் தோன்றுகின்றது. சோழருடன் தொடர்புடைய தியாகவல்லி என்ற பெயரை நோக்க, சோழபுரம் என்ற பெயர் சோபுரம் என்று மருவி, கோயில் சிறப்பு காரணமாக, திருச்சோ புரம் எனப்பட்டதா எனவும் நோக்கலாம். சோழபுரத்தின் மருவிய நிலையே சோபுரம் எனின் இதன் பழமையும் எண்ணத் தக்கது. சம்பந்தர் பாடல் வழி சோலை மிக்க தண்வயல் சூழ் சோபுரம் என்ற ஒரே குறிப்பைத் தவிர (51-1 !) வேறு எந்த விளக்கமும் கிடைக்கவில்லை.