இன்று உடையார் கோவில் என்று சுட்டப்படும் தலம். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது, சைவத் தலமாகவும், வைணவத் தலமாகவும் விளங்கும் பெருமையுடையது. திருமங்கையாழ்வாருடன் சம்பந்தராலும், அப்பராலும் பாடல் பெற்ற தலம் இது.
என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
மின்னுவார் சடை வேத விழுப் பொருள்
செந்நெலார் வயல் சேறையுட் செந்நெறி
மன்னு சோதி நம்பால் வந்து வைகவே (திருநா -191-2)
என்ற பாடல் நோக்க. செந்நெற் வயல்கள் காரணமாகச் சேறு’ அடிப்படையில் சேறை’ என்ற பெயர் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது. திருஞானசம்பந்தர் இதனைத் தமது பதிகத்தில் (344) வள நகர் சேறை’ என்றும், வளநகர் செறி பொழில் தழுவிய சேறை என்றும் சுட்டும் தன்மையை நோக்கவும், இக் கருத்து உறுதிப்படுகிறது. முதலில் சேறு நிறைந்த வயற் புறத்தில் அமைந்த கோயில் காரணமாக, பின்னர் குடியிருப்புகளும் ஏற்பட்டு சேறை என்ற ஊர்ப்பெயர் செல்வாக்குப் பெற்றிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. மணிமாட மல்கு, செல்வத் தண்சேறை, வம்பலரும் தண்சேறை எனப் பலவாறு திருமங்கையாழ்வார் திருமால் பனுவலில் பரவுகின்றார் (நாலா -1548, 1579).