சேரி

மக்கள் சேர்ந்து வாழுமிடம் “சேரி” எனக் காரணப்பெயராக வழங்கியிருக்கிறது. இச்சொல் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் பயின்று வந்துள்ளது. முல்லை நிலத்து ஊர்கள் சேரி எனப்பட்டன என்கிறார் நச்சினார்க்கினியர். ஆனால் ஊரின் புறத்தே உள்ள குடியிருப்புகளையும் சுட்டி வழங்கியிருக்கின்றது. பார்ப்பனச் சேரி, இடையச்சேரி என்றார் போல மக்கட் பிரிவினரின் பெயர்களுடனும் சேர்ந்து சங்க இலக்கியத்திலும் வழங்கியிருக்கின்றது.

குளம், நீர்நிலை என்ற பொருள்படும் “செருவு” என்ற தெலுங்குச் சொல் சில இடங்களில் “சேரி” என்று மாறியிருக்கின்றது. இவ்விடங்களில் தெலுங்குச் சொற்களுடன் இணைந்து “சேரி” வந்துள்ளது.
உதாரணமாக; தேனி மாவட்டத்திலுள்ள சிந்தலச்சேரி, தாடிச்சேரி -இவை முறையே தமிழில் புளியங்குளம், பனைக்குளம் என்று பொருள்படுகின்றன.

“பச்சேரி” என்ற கூட்டு வடிவமும் சில ஊர்களுக்கு வழங்கி வருகின்றது.