தஞ்சாவூர் மாவட்டத்தில் சேங்கனூர் என்று இன்று அழைக்கப்பெறுகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் (48). சேயாம் குமரக் கடவுள் தாம் விரும்பி உறைவதற்கு நல்ல ஊர் என்று தேர்ந்து எடுக்கப்பட்ட தலம் அது. சேய் நல் ஊர் தான் சேய்நலூர் என்று பின்னால் பெயர் பெற்றிருக்கிறது என்ற கருத்து இத்தலம் குறித்து அமைகிறது. கொள்ளிடத்திலிருந்து பிரியும் மண்ணியாற்றின் கரையிலே சேய்ஞலூர் அமைகிறது. கோச் செங்கணானுடன் தொடர்பு உடையதாக இருக்கலாம் என்பது சம்பந்தர் தேவாரம் சுட்டும் ஒரு எண்ணம். சேக்கிழார் இவ்வூரினை, செய்த்தலை பணில முத்தீனும் சேய்ஞலூர் (34-242) என் றும், சீலம் திகழும் சேய்ஞலூர் (திருக் -58) என்றும் பாராட்டுகின்றார். முருகக் கடவுள் இத்தலத்தில் சிவபெருமானை வழி பட்டுச் சூரசம்ஹாரத்திற்குத் துணையாகச் சர்வ சங்காரப் படைக்கலத்தைப் பெற்றார் என்ற எண்ணமும் இவ்வூர் பற்றி அமைகிறது. முருகன் வழிபட்ட தலமாதலின் சேய்நல்லூர் எனப் பெயர் பெற்ற தலம் இது என்ற எண்ணத்தை நோக்க முருகனுடன் தொடர்புடையதாக இப்பெயர் அமையக் காண்கின்றோம். சேய் என்பது பண்டைத் தமிழ் மக்களிடையே முருகனைக் குறிக்க வழங்கியது என்பது தொல்காப்பியம் சங்க இலக்கியம் காட்டும் நிலை. எனவே முதலில் இது முருகன் தலமாக இருந்து பின்னர் சிவத்தலமாக மாறியதோ என்ற எண்ணம் வண் எழுகின்றது.