நிகண்டுகளுள் காலத்தால் முற்பட்ட இந்நிகண்டினை இயற்றியவர் திவாகரர்என்பதும், சேந்தன் என்னும் சிற்றர சனால் இவர் உபகரிக்கப்பட்டார்என்பதும் துணியப்பட்ட செய்திகள். திவாகரர் விநாயகனை வணங்கிப் பாடிநூல் செய்தமையின் சைவசமயத்தராதல் ஒருதலை. தம்மை ஆதரித்த வள்ளலை நூலின்பன்னிரு தொகுதியிலும் இறுதி தோறும் புகழ்ந்து பாடியுள்ளமையும்நூற்பெயரின் முன் மொழியாக அவன்பெயர் வைத்தமையும் இவருடைய செய்ந்நன்றியறிதலைப் புலப்படுத்துவன. சோழநாட்டில் காவிரிக் கரைக்கண் அமைந்தஅம்பர் நகரை ஆண்டு வந்த அக்குறு நில மன்னன் வடமொழி தென்மொழிஇரண்டிலும் புலமை சான்றிருந்தமையும், ஒளவையாரால் போற்றப்பட்டமையும்,கோதண்டம் காண்டீபம் காளியின் முத்தலைச் சூலம் இவற்றைக் கவிபாடிப்போற்றியுள்ளமையும் போன்ற செய்திகள் ஒவ்வொரு தொகுதியிலும்இறுதிச்செய்யுளால் போதருவன.இதன் காலம் பத்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகல் கூடும்.இதன்வழியாகவே அடுத்துப் பிங்கலந்தையும் அடுத்துச் சூடாமணி நிகண்டும்அவற்றை அடுத்தே பிற நிகண்டுகளும் தோன்றின. இதன் சூத்திரம் நூற்பாயாப்பிற்று. தெய்வப் பெயர்த்தொகுதி முதலாகப் பல்பொருள் கூட்டத்தொருபெயர்த் தொகுதி யீறாகப் பன்னிரு பாகுபாடுகள் இதன் உட்பிரிவுகள்.