செல்லூர் என்னும் பெயருடன் சோழ நாட்டின் கீழைக்கடற் கரையில் ஓரூர் இருந்தது, வைகையாற்றின் வடகரையில் மதுரை நகரையடுத்து ஒரு செல்லூர் இருந்தது. இன்று மதுரைப் பெருநகரின் ஒரு பகுதியாக இணைந்துள்ளது. செல்லூர்க்குணாது பெருங்கடல் முழக்கிற்று ஆகி என்ற சங்க இலக்கியத் தொடர் செல்லூருக்குக் கிழக்கே பெருங்கடல் இருந்த செய்தியை விளக்குவதால் சோழ நாட்டில் கீழைக் கடற் கரையில் இருந்த செல்லூரே சங்க இலக்கியத்தில் குறிக்கப் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிகிறது. பரசுராமன் செல்லூரின்கண் வேள்வி செய்து முடித்தான் என்னும் வரலாற்றுச் செய்தியும் சங்க இலக்கியத்தில் இடம் பெற்றிருப்பதாகக் கருதுகின்றனர். ‘கெடாஅத்தி’ என்ற தொடருக்கு வேள்வித் தீ எனப் பொருள் கண்டார். குறுந்தொகையில் 363 ஆம் பாடலையும், அகநானூற்றில் 66, 250 ஆகிய பாடல்களையும் பாடிய புலவர்கள் இவ்வூரைச் சேர்ந்தவர்கள்.
“அருந் திறற் கடவுட் செல்லூர்க் குணா அது
பெருங் கடல் மூழக்கிற்று ஆகி, யாணர்
இரும்பு இடம் படுத்,த வடுவுடை முகத்தர்
கருங்கட் கோசர் நியமம் ஆயினும் (அகம். 90:9 12).
“கெடா அத்தீயின் உருகெழு செல்லூர்
கடா அ யரனைச் குழூஉச்சமம் ததைய,
மன்மறுங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
மூன்முயன்று அரிதினின் முடித்த வேள்வி,
கயிறு அரையாத்த காண்தகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல, யாவரும்
காணலாகா மாண் எழில் ஆகம்” (௸. 220:3 9)